நேரு இந்துக்களுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30A-வை சேர்த்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !

பரவிய செய்தி
மோடியின் இரண்டாவது அடி வருகிறது – சட்டம் 30 A – நேரு இந்துக்களுக்கு செய்த துரோகத்தை சரி செய்ய மோடிஜி தயாராக இருக்கிறார். இந்தச் சட்டத்தின்படி – இந்துக்கள் தங்கள் “இந்து மதத்தை” இந்துக்களுக்குக் கற்பிக்க அனுமதி இல்லை.
“சட்டம் 30” இன் படி முஸ்லிம்கள் தங்கள் மார்க்க கல்விக்காக இஸ்லாமிய மத பள்ளிகளை ஆரம்பிக்கலாம். இந்து கோவில்களில் இந்து பக்தர்கள் செய்யும் பணம் மற்றும் பிற நன்கொடைகள் அனைத்தையும் அரசு கருவூலத்திற்கு எடுத்துச் செல்லலாம். 30 ஏ காரணமாக, நம் நாட்டில் எங்கும் பகவத் கீதையை கற்பிக்க முடியாது.
சர்தார் படேல், “இந்தச் சட்டம் இந்துக்களுக்கு துரோகம் இழைக்கும், எனவே இந்த கவுவன்ஷ் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுவந்தால், நான் அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வேன் என்றார். சர்தார் படேலின் விருப்பத்திற்கு முன் நேரு மண்டியிட வேண்டியதாயிற்று.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அரசியலமைப்பில் இந்துக்களுக்கு எதிராக 30 மற்றும் 30A ஆகிய பிரிவுகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர். அப்பதிவுகளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 30 Aன் படி, இந்து மதத்தை ஒரு இந்து மற்றொரு இந்துவிற்குக் கற்பிக்க அனுமதி இல்லை என்று இருப்பதாகவும், இதனால் நமது நாட்டில் பகவத்கீதையை கற்பிக்க முடியாத சூழல் இருப்பதாகவும் பரப்பப்படுகிறது.
அதேபோல் பிரிவு 30ல் முஸ்லிம்கள் தங்கள் மார்க்க கல்விக்காக இஸ்லாமிய மத பள்ளிகளை ஆரம்பிக்கலாம். ஆனால், இந்து கோவில்களில் இந்து பக்தர்கள் செலுத்தும் பணம் மற்றும் பிற நன்கொடைகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்திற்கு எடுத்து கொள்ளலாம் போன்ற விதிகளும் இருப்பதாகவும் அப்பதிவில் உள்ளது.
*மோடியின் இரண்டாவது அடி வருகிறது – சட்டம் 30 A – நேரு இந்துக்களுக்கு செய்த துரோகத்தை சரி செய்ய மோடிஜி தயாராக இருக்கிறார்.*
*"சட்டம் 30 A" கேள்விப்பட்டிருக்கிறீர்களா ???? இது*
*"30 A" என்றால் என்ன தெரியுமா?*
*மேலும் அறிய தாமதிக்க வேண்டாம் ……*
— Alagesh Chelliah (@AlageshChelliah) June 28, 2022
மேலும், இந்த சட்டம் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகச் சர்தார் வல்லபாய் படேல் எதிர்த்தார். ஆனால், அவர் இறந்த பிறகு இப்பிரிவை அரசியலமைப்பில் நேரு சேர்த்தார். இப்போது அப்பிரிவை மோடி அரசாங்கம் நீக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவில் உள்ள அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30 மற்றும் 30A குறித்து ‘இந்தியச் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால்’ வெளியிடப்பட்ட இந்திய அரசியலமைப்பு தமிழ் மொழிப்பெயர்ப்பு புத்தகத்தினை பதிவிறக்கம் செய்து தேடினோம்.
அப்புத்தகத்தின் 12வது பக்கத்தில் பிரிவு 30 மற்றும் அதன் உட்பிரிவுகள் குறித்து உள்ளது. அப்பிரிவிற்கு “கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் சிறுபான்மையினருக்கு உரிமை” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
அதில், பிரிவு 30 உட்பிரிவு 1ல் “சமயம் அல்லது மொழி எதன் அடிப்படையிலும் சிறுபான்மையினராக உள்ள அனைவரும் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் உரிமை உடையவர் ஆவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு சமய சிறுபான்மையினர் என்பது இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் மத சிறுபான்மையினர் என்பது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோரை உள்ளடக்கியது.
மேலும், மொழி சிறுபான்மையினர் பற்றியும் இப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் பேசுபவர்கள் சிறுபான்மையினராகக் கருதப்படுவர். அவர்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கவும் உரிமை உள்ளவர்கள் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், பிரிவு 30 உட்பிரிவு 1Aல், “சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனத்தின் சொத்துக்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தச் சட்டம் ஒன்றை இயற்றுகையில், அச்சொத்தினைக் கையகப்படுத்துவதற்காக அச்சட்டத்தினால் நிர்ணயிக்கப்படும் அல்லது அதன்கீழ் தீர்மானிக்கப்படும் தொகையானது, அந்தக் கூறின்படி உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமையினை அருக்கம் செய்வதாகவோ, நீக்கறவு செய்வதாகவோ இல்லாதவாறு அரசு உறுதியுறப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என உள்ளது.
இந்த பிரிவில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியைப் போல இந்துக்களுக்கு எதிரான எந்த ஒரு பகுதியும் இடம்பெறவில்லை. மேலும், இந்தியாவில் பகவத் கீதை பற்றி பேச எந்த ஒரு தடையும் இல்லை. ‘இந்திய கலாச்சாரம்’ என்ற அரசு இணையதளத்திலேயே பகவத் கீதை புத்தகம் இருப்பதை காண முடிகிறது.
அடுத்ததாக, இந்த சட்டப் பிரிவைச் சர்தார் வல்லபாய் படேல் எதிர்த்ததாகவும், அவர் இறந்த பிறகு நேரு அரசாங்கம் அதனை அரசியலமைப்பில் சேர்த்ததாகவும் பரப்பப்படுகிறது.
1947, ஆகஸ்ட் 29ம் தேதி டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவு குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948, டிசம்பர் 8ம் தேதி பிரிவு 30 குறித்து விவாதம் நடத்தப்பட்டுள்ளது. அன்றைய தேதியிலேயே அப்பிரிவு ஏற்று கொள்ளவும் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையும் 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. சர்தார் வல்லபாய் படேல் இறந்ததோ 1950, டிசம்பர் 15ம் தேதி.
இதிலிருந்து 1948, டிசம்பர் 8ம் தேதியே பிரிவு 30 இந்திய அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதையும், அப்போது வல்லபாய் படேல் உயிருடன் இருந்துள்ளதையும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், இச்சட்டம் குறித்து அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக எந்த செய்தியும் இல்லை.
மேலும் படிக்க : அரை டவுசருடன் நேரு : இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அல்ல !
இதேபோல், நேரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்ததாக புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது. அதன் உண்மை தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டிருந்தது.
முடிவு :
நம் தேடலில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பிரிவு 30A இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. அதில், சமயம் மற்றும் மொழி சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் குறித்தே உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.