இது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதியில் ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகள் ஜனவரி 26-ம் தேதி இந்தியக் குடியரசு தினத்தில் செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான டிராக்டர் ஒத்திகை எனக் கூறி இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ஜெகபர் அலி எனும் முகநூல் பக்கத்தில் விவசாயிகளை குறிப்பிட்டு வெளியிடப்பட்ட இப்பதிவு 3 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் ஆகி உள்ளது. இப்புகைப்படம் இந்திய அளவிலும் கூட விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை என பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இந்திய விவசாயிகளை குறிப்பிட்டு பகிரப்படும் இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2019-ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அந்நாட்டின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய விவசாய கொள்கைகளுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என காண்பித்தன.
இந்தியக் குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி குறித்து தேடுகையில், ” ஜனவரி 26-ம் தேதி ஹரியானா-டெல்லி எல்லையில் மட்டுமே டிராக்டர் பேரணி திட்டமிட்டு உள்ளது மற்றும் மற்றவர்கள் கூறுவது போன்று செங்கோட்டை குடியரசுத்தின அணிவகுப்பில் நுழைவது தொடர்பாக விவசாயிகள் திட்டமிடவில்லை என விவசாயிகள் சங்கத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
” டிராக்டர் பேரணி குடியரசுத்தினத்தின் போது ஹரியானா-டெல்லி எல்லையில் மட்டுமே நடைபெறும், செங்கோட்டையில் நடக்கவில்லை என பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜிவால் கடிதத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு தெரிவித்து உள்ளதாக ” இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், குடியரசுத்தினத்தில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கான ஒத்திகை என சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் 2019-ல் ஜெர்மனி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பபட்டது.
மேலும், இந்திய விவசாயிகள்குடியரசுத்தினத்தில் டெல்லி செங்கோட்டையில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை, மாறாக டெல்லி-ஹரியானா எல்லையில் நடத்த உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.