சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 50 % அதிகரிப்பு..!

பரவிய செய்தி
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் 2017-ல் 50 % அதிகரித்து ரூ.7000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கருப்பு பணம் ஒழிந்து விட்டது, சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணம் இந்தியா கொண்டுவரப்படும் எனக் கூறிய பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவாயிற்று.
மதிப்பீடு
சுருக்கம்
2016-ம் ஆண்டை விட 2017-ல் இந்தியர்களின் பணம் 50% அதிகரித்து உள்ளதாக சுவிட்சர்லாந்து நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
விளக்கம்
சுவிட்சர்லாந்து வங்கி என்றாலே கருப்பு பணம் பதுக்கும் இடம் என்று அனைவரது மனதிலும் பதிந்து விட்டது. பல நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்துள்ளனர், இதில் இந்தியர்களும் அடங்குவர். இதில், இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களின் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்தியர்கள் கள்ளப் பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி உள்ளனர், அவற்றை மீட்டு அனைத்து இந்தியர்களின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று 2014-ம் ஆண்டு தேர்தலின் போது அதிரடியாக பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைகளுக்கு தனிக்குழு அமைத்தார். ஆனால், இதுவரை கருப்பு பணம் மீட்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. அதற்கு பதிலாக பணமதிப்பிலப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழித்து விட்டதாக கூறி விட்டனர்.
சுவிஸ் நேஷனல் வங்கி ஜூன் 28-ம் தேதி வெளியிட்ட ஆண்டுவாரித் தரவுகளின் படி சுவிஸ் வங்கியில் இருக்கும்இந்தியர்களின் பணம் 50 % அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். 2017-ம் ஆண்டு தரவுகளின் படி சுவிஸ் வங்கியில் உள்ள அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் பணமானது 3% அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் 100 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியர்களின் பணம் 7000 கோடியாகும்.
” இந்திய வாடிக்கையாளர்களின் கணக்குகளில் ரூ.3200 கோடி இந்திய ரூபாயாகவும், பிற வங்கி கணக்குகளில் இருந்து ரூ.1050 கோடியும், பங்குகள் உட்பட பிற வகையில் ரூ.2640 கோடியும் சுவிஸ் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.7000 கோடி அளவிற்கு ஒரு ஆண்டில் மட்டும் டெபாசிட் செய்துள்ளனர் இந்தியர்கள் “.
இத்தொகையானது கடந்த மூன்று வருடத்தில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2016-ல் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 45% சரிவைக் கண்டது. 2006-ல் சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்தியர்களின் பணம் ரூ.23,000 கோடியாக இருந்தது.
” இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் மூன்றாவது முறையாக உயர்வை சந்தித்துள்ளது. 2011-ம் ஆண்டில் 12%, 2013-ல் 43% மற்றும் 2017-ல் 50% உயர்வைக் கண்டுள்ளது. இதில் சென்ற ஆண்டே அதிகப்படியான உயர்வைக் கண்டது. இதற்கு முன்பாக 2004 ஆம் ஆண்டில் 56 % பணம் அதிகரித்து இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் மிகப்பெரிய அளவில் உயர்வைச் சந்தித்துள்ளது “.
கருப்பு பணம் ஒழிந்து விட்டதாகக் கூறிய ஆளும் மத்திய அரசு இதற்கு என்ன கூறப் போகிறது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“ சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் பெரும்பாலானோர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணம் இல்லை. இந்தியர்கள் கருப்பு பணம் வைத்து இருந்தால் கண்டறியப்படும் “ என்று தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் இந்திய தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வது, மறுபுறம் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு. இந்தியர்கள் செல்வந்தர்களே..! ஆனால், அனைத்து பணமும் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து உள்ளது.