இந்திய முஸ்லீம்கள் தேசியக் கொடியை எரிப்பதாகப் பரப்பப்படும் பாகிஸ்தான் போராட்டப் படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
நபிகள் நாயகத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய சொல்லி இந்திய தேசியக் கொடியை இந்திய முஸ்லீம்கள் எரித்ததாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜூன் 9-ம் தேதி இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய தேசியக் கொடி எரிக்கப்பட்டதாக ஏபி நியூஸ் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானின் லாஹூரில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் இந்திய கொடியை எரித்ததாகவும், புகைப்படம் ஏபி நியூஸ் தளத்தின் புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள பேனரில் ” Ulama-e-nizamia pak ” எனும் அமைப்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.
நுபுர் சர்மாவின் பேச்சுக்கு எதிராக பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து அல்ஜசீரா செய்தியில் பாகிஸ்தான் போராட்டத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
முடிவு :
நம் தேடலில், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படத்தை வைத்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய சொல்லி தேசியக் கொடியை இந்திய முஸ்லீம்கள் எரிப்பதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என அறிய முடிகிறது.