This article is from Aug 18, 2018

இந்திய ரூபாய் நோட்டை அச்சடிக்க சீனாவிடம் ஒப்பந்தமா ?

பரவிய செய்தி

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் சீனாவிற்கு கிடைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வலுவான நட்புறவு இல்லாத நிலையில் இந்திய நோட்டுகள் அச்சடிப்பதை சீனாவிடம் ஒப்படைத்து இருப்பது அதிகளவில் கள்ள நோட்டுகளின் வருகைக்கு அடித்தளமிட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

சீனாவின் மூலம் இந்திய ரூபாய்களை அச்சடிக்க முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் தவறானவை. இந்திய ரூபாய் நோட்டுகள் இந்திய அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மூலம் மட்டுமே அச்சிடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

சீனாவில் உள்ள banknote printing and minting corporation என்ற கம்பெனி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளதாக தென் சீனாவில் உள்ள மார்னிங் போஸ்ட் உள்ளிட்ட பல செய்தி தளங்களில் தகவல் வெளியாகியது.

அதில், உலகளவில் பணம் அச்சடிக்கும் பணியை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தி வருவதாகவும், சமீபத்தில் தாய்லாந்து, ஸ்ரீலங்கா, பிரேசில், மலேசியா, பங்களாதேஷ், போலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பணத்தினை அச்சடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர்.

இந்தியாவின் ரூபாய் நோட்டுகளை அயல் நாட்டில் அதிலும் இந்தியாவிற்கு வலுவான நட்புறவு நிலைக்காத எல்லைப் பிரச்சனையில் இருக்கும் சீனாவிடம் எவ்வாறு இந்திய அரசு பணம் அச்சடிக்கும் பணியை ஒப்படைக்கலாம் என கேள்விகள் எழுந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இது உண்மையாக இருந்தால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை உருவாக்கும். பாகிஸ்தான் கள்ள நோட்டுகளுக்கு எளிதாக்கும். இது குறித்து அருண் ஜேட்லி மற்றும் பியுஷ் கோயல் தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் அரசு சார்பில், “ சீனாவின் பணம் அச்சடிக்கும் நிறுவனம் மூலம் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறும் தகவல் ஆதாரம் அற்றவை “ எனக் கூறப்படுகிறது.

மத்திய நிதி விவகாரத் துறையின் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில், “ இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் இதுவரை மற்றும் இனிமேலும் இந்திய அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மூலம் மட்டுமே நிகழும் “ எனக் தெளிவுப்படுத்தி உள்ளார்.

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் நான்கு உள்ளன. அதில், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும்  மத்தியப்பிரதேசத்தில் உள்ள டேவாஸ் ஆகிய இரண்டு அச்சகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. RBI-ன் துணை நிறுவனமான பாரதீய ரிசர்வ் பேங்க் நோட் முட்ரன்(பி) மூலம் கர்நாடகாவில் உள்ள மைசூரு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனியில் உள்ள அச்சகம் செயல்படுகிறது.

இந்திய ரூபாய் நோட்டுகள் three dimensional watermark , micro lettering , security threads உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. இந்த டிசைன்கள் உருவாக்கவும், மேம்படுத்த ஆராய்ச்சி குழு உள்ளது. சீன ஊடகங்களில் கூறுவது போன்று வெளிநாட்டு அச்சகம் இதில் ஈடுபட வாய்ப்பில்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சீன செய்தி நிறுவனங்களில் ஒப்பந்தம் கிடைத்துள்ளது என்று வெளியிட்டு இருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader