இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பரவும் தவறான படங்கள்..!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்திய ராணுவ வீரர் ஒருவர் காலில் காயமடைந்த நிலையிலும் கூட அதைப்பற்றி கவலைக் கொள்ளாமல் எதிரிகளை தாக்கும் பணியில் ஈடுபடுகிறார். அவருக்கு மற்றொரு ராணுவ வீரர் முதலுதவி செய்கிறார். இவர்களின் கடமையைப் பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வரவழைக்கின்றது. தேசத்திற்காக போராடும் நம் வீரர்களின் செயல் பிடித்து இருந்தால் ஜெய்ஹிந்த் கூறுங்கள்.
நாட்டிற்காக பாடுபடும் இந்திய ராணுவ வீரர்கள் பற்றி புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிர்வது அதிகம் காணலாம். எனினும், அதை உணர்ச்சி வசப்பட்டு அதிகம் பகிரவும் செய்கின்றனர். அதில், உண்மை எது ? பொய் எது ? என்று யாரும் யோசிப்பதில்லை. ராணுவ வீரர் என்று பதிவிட்டாலே அதை பகிர்ந்து விடுகிறார்கள். இது உணர்வுப்பூர்வமான நம்பவைத்து வதந்தியை பரப்பும் முறை.
காலில் பட்டக் காயத்துடன் போராடும் இந்திய வீரர் மற்றும் அவருக்கு முதலுதவி செய்யும் வீரர் என்று பரவும் புகைப்படத்தில் இருப்பதில் இந்திய வீரர்களே இல்லை. அமெரிக்க நாட்டின் ராணுவ வீரரை இந்திய வீரர் என்று பொய்யுரைத்து தவறான செய்தியை பதிவிட்டு உள்ளனர்.
மேஜர் ராபர்ட் பாப் கல்லக்ஹெர் என்ற ராணுவ வீரர் சோமாலியா நாட்டில் “ பிளாக் ஹாக் டவுன் “ என்ற பிரபலமான போரில் டாஸ்க் ஃபோர்ஸ் ரேஞ்சர் படைப்பிரிவில் பணியாற்றினார். அதில், 2003-ல் பாக்தாத் செல்லும் வழியில் 15-வது காலாட்படையின் 3-வது பட்டாலியன் ஆவார். ராபர்ட் பாப் கல்லக்ஹெர் சோமாலியா மற்றும் ஈராக் விடுதலை போரில் பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூ ஜெர்சியில் பிறந்து ராணுவ வீரராக இருந்த ராபர்ட் பாப் கல்லக்ஹெர் 2014-ல் தனது 52-வது வயதில் ஜார்ஜியாவில் இறந்தார்.
1993-ல் நடைபெற்ற சோமாலியா போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராபர்ட் பாப் கல்லக்ஹெர் காலில் காயமடைந்தும் எதிரிகளை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மற்றொரு வீரர் முதலுதவி செய்த புகைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்தது. 1993-ல் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற மோகடிஷு, சோமாலியா போர் நாட்கள் தன் வாழ்நாளின் மிகவும் சிறந்த நாட்கள் மற்றும் மோசமான நாட்கள் என கல்லக்ஹெர் கூறியதாக பத்திரிகையில் வெளியாகியது.
சோமாலியா போரில் காயமடைந்த ராபர்ட் பாப் கல்லக்ஹெர் புகைப்படத்தை இந்திய ராணுவ வீரர் என்று தவறாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்திய வீரர்கள் என்றுக் கூறி அயல்நாட்டு வீரர்களின் படங்கள், ஃபோட்டோஷாப் செய்த படங்கள் என தவறான படங்களை பரப்புவது தொடர் கதையாய் இருக்கிறது.
இந்திய வீரர்கள் எல்லையில் நாட்டுக்காக போராடுகிறார்கள், தீவிரவாதிகளாலும், அயல்நாட்டு வீரர்களாலும் இறந்து போகிறார்கள், பேரிடர்களில் உயிரைப் பணையம் வைத்து மீட்டுப் பணிகளை செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்களே. ஆனால், தவறான படங்களை இணைத்து அல்ல.