சைக்கிளில் ராக்கெட், மாட்டு வண்டியில் செயற்கைக்கோள் ஏன் ?| இந்திரா காந்தி நிதி வழங்கவில்லையா ?

பரவிய செய்தி
இஸ்ரோ ராக்கெட் பாகங்களை சைக்கிளிலும், செயற்கைக்கோள் பாகங்களை மாட்டு வண்டியிலும் கொண்டு செல்லும் போது அதற்கான நிதி ஒதுக்காமல் இந்திரா காந்தி தன் பேரனுக்கு தனி விமானத்தில் ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
மதிப்பீடு
சுருக்கம்
இஸ்ரோ ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பாகங்கள் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியில் கொண்டு சென்றது எந்த ஆண்டு, அதற்கு இஸ்ரோ தரப்பில் அளிக்கப்பட்ட காரணங்களையும் விரிவாக காண்போம்.
விளக்கம்
இந்திய தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில் கட்சிகள் சார்ந்த எதிர்மறை செய்திகள் இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு ” மிஷன் சக்தி ” சோதனை வெற்றி பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பிறகே இந்திரா காந்தி பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றன.
வலதுசாரி ஆதரவான Post Card , ” நாங்கள் மறக்க மாட்டோம் . இந்திரா காந்தி காலத்தில் இஸ்ரோவின் ஏவுகணை பாகங்கள் சைக்கிளில் வைத்து எடுத்து செல்லும் பொழுது அதற்கான நிதியை அளிக்காமல் தன் பேரன் ராகுல் காந்திக்கு தனி விமானத்தில் ஆடம்பரமாக பிறந்தநாள் விழா கொண்டாடினார் ” என மீம் வடிவில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இதே போன்று, இந்திரா காந்தி உடன் தொடர்புப்படுத்தி மாட்டு வண்டியில் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் எடுத்து செல்லும் பொழுது ராகுல் காந்திக்கு தனி விமானத்தில் ஆடம்பரமாக பிறந்தநாள் விழா கொண்டாடினார் என்றும் பல மொழிகளில் பதிவிடப்படுகிறது.
இந்தியாவின் ராக்கெட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் பாகங்கள் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியில் எடுத்து சென்றது உண்மையே. நடந்த நிகழ்வுகளுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
தும்பா ஏவுகணை தளம் :
கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா என்று கிராமத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலயத்தை தும்பா பூமத்திய ஏவுகணை சோதனை தளமாக 1960-களில் மாற்றி அமைத்தனர். தும்பா சோதனை தளம் மற்றும் அதில் ஐயா அப்துல் கலாம் பணியாற்றியது பற்றி லிங்கில் படிக்கவும்.
மேலும் படிக்க : ஏவுகணை சோதனையில் கலாம் ஐயா | இளமைக்கால அரியப் படம்.
ஏவுகணைகள் சோதனை தளம் அமைக்கப்பட்ட ஆரம்ப காலம் என்பதால் அங்கு வாகன வசதிகள் பெரிதாக இல்லை. ஆகையால், எந்த தேவையாக இருந்தாலும் விஞ்ஞானிகள் சைக்கிள் உள்ளிட்டவையிலேயே திருவனந்தபுரம் வரை செல்ல வேண்டும். 1963-ல் செலுத்தப்பட்ட முதல் ஏவுகணைக்காக பாகங்களை சைக்கிளில் கொண்டு சென்றுள்ளனர்.
மாட்டுவண்டியில் செயற்கைக்கோள் :
இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ” ஆப்பிள் ” 1981 ஆகஸ்ட் 13-ம் தேதி இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் இந்தியாவிற்கு அர்பணிக்கப்பட்டது. ஆப்பிள் செயற்கைக்கோளின் சோதனையின் போது அதனை மாட்டு வண்டியில் வைத்து இருக்கும் புகைப்படம் இஸ்ரோ இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.
அன்றைய காலத்தில், மின்காந்த குறிக்கீடு பிரதிபலிப்பு குறித்த முழுமையான புரிதல் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இயந்திரங்களை விஞ்ஞானிகள் பயன்படுத்த விரும்பாத காரணத்தினால் மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கூறியதாக மூத்த அறிவியல் எழுத்தாளர் பல்லவ பாகலா பிபிசியில் தெரிவித்து இருக்கிறார்.
ராகுல் காந்தி பிறந்தநாள் :
ராகுல் காந்தியின் பிறந்தநாளை 1977-ம் ஆண்டு இந்திரா காந்தி மற்றும் அவரின் குடும்பத்தினர் விமானத்தில் கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியே தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.
ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாடியது 1977-ல், ராக்கெட் பாகங்கள் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது 1960-களில் நேரு பிரதமராக இருந்த போது, மாட்டு வண்டியில் செயற்கைக்கோள் கொண்டு சென்றது 1980-களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாகவே.
ஆகவே, வலதுசாரி ஆதரவாளர்கள் இந்திரா காந்தி மீதான குற்றச்சாட்டுகளை தேர்தல் நேரம் பார்த்து பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகி இருக்கிறது.