தன் கணவர் முஸ்லீம் என்பதால் இந்திரா காந்தி மதம் மாறினாரா ?

பரவிய செய்தி
இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்பதும் அவரது கணவர் பெரோஸ்கான் என்பதும் இந்திரா மதம் மாறிய முஸ்லீம் என்பதும் அப்படி இந்துக்களை ஏமாற்ற இந்திராகாந்தி என பெயரை மாற்றினார் என்பதும் நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் ?
மதிப்பீடு
சுருக்கம்
இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்ற வதந்தி நீண்ட காலமாக பரவி வருகிறது. இப்பதிவு கிண்டல் பதிவாக கூட இருந்தாலும் வதந்தி என்பதை கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.
விளக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கணவருடைய மதம், பெயர் குறித்த தவறான தகவல்கள் பல முறை சமூக வலைதளங்கள், செய்திகளில் வெளியாகி இருக்கிறது. இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தியின் உண்மையான பெயர் பெரோஸ் கான், அவர் ஒரு முஸ்லீம் என்ற கருத்து தொடர்ந்து எழுகிறது.
இந்திரா காந்தியின் தந்தை ஜவஹர்லால் நேரு காஷ்மீரின் பண்டிட் பிரிவைச் சேர்ந்தவர்கள் . இந்திரா காந்தி மதம் மாறினார் என்பதற்கு எங்கும் ஆதாரங்கள் இல்லை. இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான ” Pupul jayakar ” -ல் கூட அதனைப் பற்றி குறிப்பிடவில்லை.
அடுத்ததாக, இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் அல்ல. பார்சி இனத்தைச் சேர்ந்தவர். ஈரானில் இருந்து பார்சி இன மக்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பார்சி இனத்தை சேர்ந்தவர் தான் பெரோஸ் காந்தி.
பெரோஸ் காந்தியின் தந்தை ஜகாங்கீர் ஃபாரீதூன் காந்தி ஓர் மரைன் இஞ்சீனியர் என்றும், குஜராத்தை சேர்ந்த பார்சி இனத்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தியும் காங்கிரஸில் இருந்த தலைவர்களில் ஒருவராவார்.
முடிவு :
நமது தேடலில் இருந்து, பெரோஸ் காந்தி பற்றியும், இந்திரா காந்தி பற்றியும் மீண்டும் மீண்டும் பொய்யான செய்தியை அரசியல் நோக்கத்திற்காக பரப்புகின்றனர் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். தென் மாநிலங்களில் தவிர்த்து வட இந்தியாவில் இந்த வதந்தி அதிக அளவில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.