இந்திரா காந்தி கல்வான் பள்ளத்தாக்கில் உரையாற்றும் புகைப்படமா ?

பரவிய செய்தி
லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அன்றைய பிரதமா் இந்திரா காந்தி இந்திய இராணுவ வீரா்களுடன் உரையாற்றிய காட்சி!
மதிப்பீடு
விளக்கம்
லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீறலால் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை பிரச்சனை அரசியல் சார்ந்து பெரிதும் பேசப்படும் நிலையில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய காட்சி என இப்புகைப்படம் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்வர்கள் , ஆதரவாளர்கள் பலரும் இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
மலைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மற்றும் கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில் art-sheep எனும் இணையதளத்தில் ” On This Day: 19 January 1966 – Indira Gandhi takes charge in India ” என்ற தலைப்பில் இந்திரா காந்தியின் அரிதான புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
அதில் , 1971-ம் ஆண்டு லே பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உரையாற்றிய அரிதான புகைப்படங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிடிஐ உடைய புகைப்படங்கள் சேமிப்பு தளத்தில் ” leh ” எனும் வார்த்தையைக் கொண்டு தேடிய பொழுது 1971-ல் லே பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றிய இந்திரா காந்தியின் புகைப்படம் எனக் கூறி இந்த வைரல் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை காண முடிந்தது.
லடாக்கில் இருக்கும் “லே” பகுதிக்கும், சீன ராணுவத்தினர் மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் இடையே 200கி.மீக்கும் அதிகமான தொலைவு உள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில், இந்திரா காந்தி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களின் மத்தியில் உரையாற்றியதாக பரப்பப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டது கல்வான் பள்ளத்தாக்கு பகுதி அல்ல, லே பகுதி என அறிய முடிந்தது.