இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவாலயமா ?

பரவிய செய்தி
இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட ‘சிவாலயம்’ கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ? #7500… அதாவது ‘அமெரிக்க கண்டம்’ கண்டு பிடிப்பதற்கு முன்னர். அதாவது ‘கிறுத்துவம், இஸ்லாம்’ தோன்றுவதற்கு முன்னர்.
மதிப்பீடு
விளக்கம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய நிலப்பரப்பில் ஆட்சிப் புரிந்த மன்னர்கள் கடல்கடந்து பல நாடுகளில் தங்களின் ஆட்சியை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். இங்கிருந்து சென்ற மக்கள் அங்கு வாழ்ந்தும் இருக்கிறார்கள். அதன் ஆதாரமாக, இந்தியாவின் அண்டை நாடுகள் பலவற்றில் தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கோவில்கள், கடவுள் சிலைகள் பல கிடைத்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான நாடு இந்தோனேசியா.
இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் பூமிக்கு அடியில் சுமார் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததாக சிவலிங்கத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2013-ல் vietnam.vnanet.vn எனும் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் பழமையான சிவலிங்கத்தின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது “.
வியட்நாமின் லாம் டோங் மாகாணத்தில் உள்ள கேட் டைன் பகுதியில் கண்டறியப்பட்ட பழமையான சிவாலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இது. இந்த பகுதி 1985-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சில் கண்டெடுக்கப்பட்ட இப்பகுதி 4 முதல் 9-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என வியட்நாம் சுற்றுலா தலம் இணையத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதேபோல், 2020-ல் வியட்நாம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கம் கிடைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
Reaffirming a civilisational connect.
Monolithic sandstone Shiv Linga of 9th c CE is latest find in ongoing conservation project. Applaud @ASIGoI team for their work at Cham Temple Complex, My Son, #Vietnam. Warmly recall my visit there in 2011. pic.twitter.com/7FHDB6NAxz
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 27, 2020
மேலும் படிக்க : இந்தோனேசியாவில் 7000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் கண்டுபிடிப்பா ?| உண்மை என்ன ?
இதற்கு முன்பாக கூட, இந்தோனேசியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான சிலைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை 7000 ஆண்டுகள் பழமையான கோவில்கள், சிலைகள் கிடைத்ததாக தவறாக பரப்பி இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டறியப்படவில்லை. அந்த புகைப்படம் இந்தோனேசியாவே அல்ல, வியட்நாம் நாட்டைச் சேர்ந்தது. அந்த சிவலிங்கம் அமைந்திருக்கும் ஆலயப் பகுதி 4 முதல் 9 நூற்றாண்டுக்கு இடைப்பட்டது எனக் கூறப்படுகிறது.