இந்தோனேசியாவில் விமான நிலைய அதிகாரியை அடித்தது இந்திய பெண்ணா ?

பரவிய செய்தி
இந்தோனேசியாவின் பாலி விமான நிலைய அலுவலகத்தில் வட இந்திய பெண் ஒருவர் பணியில் இருந்த அதிகாரி ஒருவரை கன்னத்தில் அறைந்ததால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். விமானத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்காத காரணத்தினால் கோபத்தில் அதிகாரியை அறைந்துள்ளார். அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
Auj-e-Taqqaddas என்ற 42 வயது மதிப்புத்தக்க பிரித்தானிய பெண் ஒருவர் இந்தோனேசியாவின் பாலியில் உள்ள Ngurah Rai சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்துள்ளார்.
விமானத்தில் செல்வதற்காக போர்டிங் பாஸ் பெற்ற பிறகு immigration அலுவலத்தில் சரிபார்க்கும் பொழுது அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டுள்ளார். காரணம் அவரின் விசா காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியுள்ளன. 19 ஜனவரி 2018-ல் இந்தோனேசியா வந்த Auj-e-Taqqaddas-விற்கு விசா பிப்ரவரி உடன் முடிந்துள்ளது.
சுமார் 160 நாட்களுக்கு மேலாக விசா காலம் முடிவடைந்தும் இந்தோனேசியாவில் தங்கி இருந்தது குற்றம் ஆகும். ஆகையால், அது தொடர்பாக அபராதம் மற்றும் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை அவர் காத்திருப்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ஒரு நாளைக்கு 25$ வீதம் 3000$-க்கும் மேல் அபராதம் செலுத்த வேண்டி இருந்தது.
இதற்கிடையில், அவர் சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தை தவற விட்டதால் கடும் கோபத்திற்கு ஆளாகி விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு பணம் என்று சொல் உடனே தருகிறேன் என்றும், கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அதிகாரிகளை திட்டியதோடு அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்து உள்ளார்.
பிரித்தானிய பெண் சுற்றுலாப் பயணி நடந்தக் கொண்ட முறை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வீடியோ முழுவதும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களின் பணியைப் பற்றியும், அவர்களையும் கடுமையாக திட்டியோடு அதிகாரிகளிடம் வன்முறையாக நடந்து கொண்டதால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரியை கன்னத்தில் அறைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், வட இந்திய பெண் என்றுக் கூறி இந்த வீடியோ பதிவுகள் இந்தியாவில் அதிகம் வைரலாகி வருகிறது.