இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு எனத் தவறாகப் பரவும் கணினி சித்தரிப்பு வீடியோ !

பரவிய செய்தி

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி மொபைல் இருட்டியபின் 15 வினாடி காத்திருக்கவும்.

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை ஒன்று வெடித்த காட்சி என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் வரும் கரும்புகை திரையை இருட்டாக்கியதும் 15 வினாடிகள் காத்திருக்கவும் என அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படித் திரை இருட்டிய பிறகான 15வது வினாடிக்குப் பிறகு அந்த எரிமலை வெடித்து அந்த இடமே சாம்பல் மண்டலமாக மாறுகிறது.

உண்மை என்ன ? 

பரப்பப்படும் வீடியோவை கவனிக்கையில் அது கணினி தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அந்த வீடியோ உருவாக்கப்பட்டதின் நோக்கம் குறித்து இணையத்தில் தேடினோம். 

அவ்வீடியோ Auckland War Memorial Museum என்ற யூடியூப் பக்கத்தில் 2019, டிசம்பர் 19ம் தேதி, Auckland Museum Volcano Simulation – Auckland Museum” என்ற தலைப்பில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அவ்வீடியோ நிலைத்தகவலில்(description) எரிமலை வெடிப்பினால் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிக் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட வீடியோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீடியோ குறித்துத் தேடியதில், 2017ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ம் தேதி Express’ என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. “நீருக்கடியில் உள்ள எரிமலை வெடித்தால் என்னவாகும்? பேரழிவை வெளிக்காட்டும் வீடியோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில், ஆஸ்திரேலிய புவியலாளர்கள் நியூசிலாந்தில் உள்ள எரிமலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் நியூசிலாந்தில், ஆக்லாந்து  (Auckland) என்ற பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்தால் எம்மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 

கடலுக்கு அடியிலுள்ள எரிமலை வெடித்தால், அதனால் ஏற்படும் அதிர்வு மற்றும் எரிமலை வெப்பத்தினால் அருகிலுள்ள நிலப்பகுதியின் செழுமை அழிதல் போன்றவற்றை விளக்கவே அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி எனப் பரவும் வீடியோ உண்மையல்ல. அது நியூசிலாந்தில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்தால் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்க புவியியல் ஆய்வாளர்களால் கணினி தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader