கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்ததா ?| தலைப்பால் குழப்பம்.

பரவிய செய்தி

மாதவிடாய் தொடர்ந்து வந்த நிலையில், கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்த அதிசயபெண்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமடைந்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்ற அதிசய சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக குழந்தையுடன் ஒரு பெண் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவில் பகிரப்பட்டு வருகிறது. இப்படி மீம்ஸ் பரவக் காரணம் தமிழ் செய்திகளில் வைக்கப்பட்ட தலைப்பே. ஆம், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது. ஆனால், தலைப்பால் ஏற்பட்ட குழப்பத்தால் கிண்டல் மீம்ஸ்கள் வைரலாகின்றன.

News link | archive link 

யார் அவர் ? 

இந்தோனேசியாவின் தாஸிக்மலாயா பிராந்தியத்தின் புஸ்பாஹியாங் மாவட்டத்தில் உள்ள மண்டலஸரி கிராமத்தில் வசித்து வரும் ஹேனி எனும் பெண் ஜூலை 18-ம் தேதி இரவு 8 மணிக்கு வழக்கம் போல வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்பெண் கர்ப்பமாய் இருப்பதை உணர்ந்த ஒரு மணி நேரத்தில் 3.4 கிலோ கிராம் எடையில் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.

இது குறித்து ஹேனி, ” எனக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வந்து இருந்தாலும், என் வயிற்றில் தொந்தரவாக இருந்தது. பின்னர் அது கடினமாகி அசைவுகளை உணர்ந்தேன். எனக்கு இது 3-வது குழந்தை. எல்லாம் நல்லபடியாக அமைந்துள்ளது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் ” எனக் கூறியதாக indonesiaexpat.biz இணையதளத்தில் ஜூலை 22-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

க்ரீப்டிக் ப்ரெக்னன்சி :

இத்தனை நாள் கர்ப்பமாய் இருந்ததை ஹேனி உணரவில்லையே தவிர அவர் மற்ற பெண்களை போல் பல மாதங்கள் கருவை வயிற்றில் சுமந்து தான் குழந்தையை பெற்று உள்ளார். இந்த வகையான பிரசவத்தை க்ரீப்டிக் ப்ரெக்னன்சி என அழைப்பர். க்ரீப்டிக் ப்ரெக்னன்சி எனும் வார்த்தை மக்கள் மத்தியில் பிரபலமடையாத ஒன்று. ஏனெனில், இது மிகவும் அரிதான ஒன்றாக நிகழ்கிறது. அதிலும், மேற்கு ஜாவாவின் தாஸிக்மலாயாவில் நிகழ்ந்தது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. இதற்கு பல உளவியல் காரணங்கள் கூறப்படுகிறது. 

க்ரீப்டிக் ப்ரெக்னன்சி உடைய பெண்களுக்கு கர்ப்பம் தொடர்பான அறிகுறிகளான குமட்டல், உடல் எடை அதிகரித்தல், இடுப்பில் சதை போன்றவை தெரிவதில்லை. பொதுவாக, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவுகள் தெரியும். ஆனால், நஞ்சுக்கொடியின் நிலை கருப்பையின் முன்புறத்தில் இருந்தால், குழந்தையின் அசைவுகளை தாய் உணராமல் இருக்க முடியும் என்கிறார்கள். மாதவிடாய் முறையை வைத்து பெண் கர்ப்பமாக இருக்கிறாரா அல்லது இல்லையா என நினைப்பதுண்டு. ஆனால், மன அழுத்தம், மருந்துகளின் தாக்கம், உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்றவற்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம்.

பொதுவாக, க்ரீப்டிக் ப்ரெக்னன்சி பற்றி அறியும் காலம் மாறுபடக்கூடும். பிரசவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள், சிலர் சில மாதங்களுக்கு முன்பாகவே கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். ஆனால், குழந்தை வளர்ச்சி, பிறப்பு உள்ளிட்டவை சாதாரண பிரசவத்தைப் போன்றே இருக்கும். 

க்ரீப்டிக் ப்ரெக்னன்சி நிலையில் குழந்தை பெற்ற இந்தோனேசிய பெண் குறித்த செய்திகளின் உள்ளே சரியான தகவலை அளித்து விட்டு, கர்ப்பமாய் இருப்பதை உணர்ந்த ஒரு மணி நேரத்தில் என வைப்பதற்கு பதிலாக தலைப்பில் ” கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் ” என வைத்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button