தன் காருக்கு தீ வைத்துவிட்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சியினர்.. வைரலாகும் 4 வருட பழைய செய்தி !

பரவிய செய்தி

இதோ சங்கிகளின் அடுத்த அயோக்கியத்தனம், மொள்ளமாறித்தனம்! தாங்களே தங்கள் காரை எரித்துவிட்டு, பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் சொல்லி மாட்டிக் கொண்டனர்! மத மோதலை தூண்டிய குற்றத்திற்காக இவர்களை கண்டிப்பாக தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் இதை பரப்புங்கள் தோழர்களே

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கடந்த சில தினங்களாக பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரின் வீடுகள் மற்றும் வாகனங்களின் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசும் குற்ற சம்பவங்களை நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இந்து மக்கள் கட்சியின் அனுமந்த் சிவசேனாவின் நிர்வாகி காளிகுமார் தனது காரின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினரின் விசாரணையில் காளிகுமார் தனது காருக்கு தானே தீ வைத்து கொண்டதாக தெரிய வந்துள்ளது என பாலிமர் சேனலின் வீடியோ ஒன்றினை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

இந்து மக்கள் கட்சி அனுமந்த் சிவசேனாவின் நிர்வாகி காளிகுமார் தனது காருக்கு தானே தீ வைத்து கொண்டார் என பரப்பப்படும் பாலிமர் தொலைக்காட்சியின் வீடியோவின் உண்மை தன்மையினை கண்டறிய முயற்சித்தோம்.

“காருக்கு தாங்களே தீ வைத்து விட்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சியினர் கைது” என்ற தலைப்பில் 2018, ஜூலை 7ம் தேதி அந்த வீடியோ சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது.

 

அதில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த மீஞ்சூர் வண்டலூர் சாலையில் 2018, ஜூலை 6ம் தேதி இந்து மக்கள் கட்சியின் அனுமந்த் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் காளிகுமார், அவரது அண்ணன் மகன் ரஞ்சித், அவ்வமைப்பின் நிர்வாகி ஞான சேகரன் ஆகியோர் காரில் சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் கார் எரிந்து விட்டதாக காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

இதனை அடுத்து, கார் எரிந்த இடத்தினை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான எந்த தடையமும் கிடைக்காத நிலையில் காளிகுமாரை காவல்துறையினர் விசாரித்து உள்ளனர்.

விசாரணையில் காளிகுமார் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, சம்பவத்தின் போது உடன் இருந்த ஞானசேகரனை விசாரித்துள்ளனர். அப்போது அவர் காருக்கு தாங்களே தீவைத்து விட்டு பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார் கொடுத்ததினை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 2018,ஜூலை 7ம் தேதி “விளம்பரத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு – இந்து மக்கள் கட்சியினர் கைது” என்ற தலைப்பிட்டு தந்தி டிவி உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : வைரலாகும் பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாங்களே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்ட சம்பவங்கள் !

இதற்கு முன்னதாக இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் தங்களது கார் மற்றும் வீடுகளின் மீது தாங்களே தீ வைத்து கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது பற்றி யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், இந்து மக்கள் கட்சியின் அனுமந்த் சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் காளிகுமார் தனது காரின் மீது தானே தீ வைத்து விட்டு பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் சொல்லி மாட்டிக் கொண்டனர் எனப் பரப்பப்படும் செய்தி உண்மையே. ஆனால், அது 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தி வீடியோ தற்போது நிகழ்ந்தது போல் பரப்பப்பட்டு வருகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader