உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு

பரவிய செய்தி

உளவுதுறையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் 60% மேல் ஒரு மதத்தினை சார்ந்தவர்களாக உள்ளனர்.

துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் இவர்கள்தான் இருக்க வேண்டும். இவர்கள் இருக்கக் கூடாது என நியமிக்கிறார்கள்  – பாஜக தலைவர் அண்ணாமலை

மதிப்பீடு

விளக்கம்

கோயம்புத்தூரில் அக்டோபர் 23ம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து 25ம் தேதி பாஜகவின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாடு உள்துறையில் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளில் 60 சதவீதம் ஒரு மதத்தினர் மட்டுமே உள்ளனர் என்று கூறினார். மேலும் உளவுத்துறை மிஷினரி போலச் செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும் ரங்கராஜ் பாண்டேவிற்கு அண்ணாமலை அளித்த நேர்காணல் சாணக்கியா யூடியூப் சேனலில் அக்டோபர் 28ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், உளவுத்துறையில் இவர்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த பிறகு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளுக்கு இவர்களை மட்டும் கொண்டு வாருங்கள் எனக் கூறப்பட்டுள்ளது பேசி உள்ளார்.

உண்மை என்ன ?

உளவுத்துறையில் அதிக அளவில் குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே உள்ளனர். அவர்கள் மிஷினரி போலச் செயல்படுகிறார்கள் என அண்ணாமலை பேசியதில் இருந்து கிறிஸ்துவ மதத்தினரைக் குறிப்பிடுகிறார் என அறிய முடிகிறது. 

பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தொடர்பாகக் காவல் கண்காணிப்பாளர் (SP) சரவணன் அவர்களை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். 

அவர் கூறியதாவது, உளவுத்துறையில் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), கண்காணிப்பாளர் (SP), ஐஜி , ஐடிஜிபி (ADGP) என மொத்தம் 61 பணியிடங்கள் உள்ளன. அதில் 11 பேர் கிறிஸ்தவ மதத்தினை சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

அதிலும், 4 பேர் மட்டுமே கடந்த 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்தகைய உயர் பதவிக்கு வந்தவர்கள். அதிலும் இரண்டு பேர் பதவி உயர்வின் மூலமும், இரண்டு பேர் சட்ட ஒழுங்கு துறையில் இருந்தும் பதவிக்கு வந்தவர்கள் எனத் தெரிவித்தார். 

காவல் கண்காணிப்பாளர் அளித்த தரவின்படி, உளவுத்துறையில் மொத்தமுள்ள 61 உயர் அதிகாரிகள் பணியிடங்களில் 11 அதிகாரிகள் கிறிஸ்தவர்கள் என்பது அண்ணாமலை சொல்லுவதைப் போல, 60 சதவீதம் இல்லை. உண்மையில் அது 18 சதவீதம் என அறிய முடிகிறது. இதில் இருந்து, ஆதாரமற்ற, தவறான தகவலை அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். 

ஒரு வேலை அண்ணாமலை கூறுவதைப் போல உளவுத்துறையில் குறிப்பிட்ட மதத்தினர் இருந்தால் என்ன தவறு இருக்கிறது ? அப்படி நியமனம் செய்யக் கூடாது என எந்த சட்ட விதிமுறைகளும் இல்லை. இதில் மத வெறுப்பு தேவைதானா ?.

ஏற்கனவே உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமிற்கு எதிராக அண்ணாமலை பேசி வந்தார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால் தற்போது இப்படியொரு தவறானப் பிரச்சாரத்தை அண்ணாமலை உருவாக்குகிறாரா எனக் கேள்வி எழுகிறது. 

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாடு உளவுத்துறையில் கிறிஸ்தவர்கள் மட்டும் 60 சதவீதத்தினருக்கும் மேலாக உயர் பதவியை வகிப்பதாகக் அண்ணாமலை கூறிவருவது உண்மை அல்ல.

உளவுத்துறையில் மொத்தமுள்ள 61 உயர் அதிகாரி பணியிடங்களில் 11 அதிகாரிகள் மட்டுமே கிறிஸ்துவ மதத்தினைச் சார்ந்தவர்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader