சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு – மோடியின் ராஜதந்திரம் எனப் பரப்பப்படும் பொய் செய்தி !

பரவிய செய்தி
சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 193 வாக்குகளில் 183 வாக்குகள் பெற்று பிரிட்டன் நீதிபதி கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை தோற்கடித்தார்.
பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் கடந்த 6 மாதங்களாக இதைச் சாதிக்க உழைத்து வருகின்றனர்! இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி!!! பிரதமர் மோடியின் சாணக்கிய ராஜதந்திரம்.
மதிப்பீடு
விளக்கம்
சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த சர்வதேச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 193 வாக்குகளில் 183 வாக்குகளை அவர் பெற்று பிரிட்டன் நீதிபதி கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை தோற்கடித்துள்ளார்.
இதனைச் சாதிக்கப் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 6 மாதங்களாக உழைத்து வருகிறது. இதுவே மோடியின் சாணக்கிய ராஜதந்திரம் எனச் செய்தி ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பாஜக-வின் ஆதரவாளர்கள் பலர் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
சர்வதேச நீதிமன்றமானது 1945 ஜூன் மாதம் நிறுவப்பட்டு, 1946 ஏப்ரல் முதல் செயல்பட்டு வருகிறது. இது நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் ஓர் நீதிமன்றமாகும். மேலும், ஐ.நா சபை மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் இதனை அணுகும் போது சட்ட ஆலோசனையும் வழங்கும்.
இந்த நீதிமன்றத்தில் 15 நாட்டினை சார்ந்த நீதிபதிகள் உறுப்பினராக இருப்பர். அவர்களின் பதவிக் காலம் 9 ஆண்டுகள். இந்த நீதிபதிகள் தங்களது சொந்த நாட்டின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பும் சர்வதேச நீதிமன்றம் செய்தி பற்றி அதன் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேடினோம். சர்வதேச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்கிற பதவி இல்லை. அதில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளே உள்ளன.
இதன்படி சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் இ.டோனோக் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறார். அதே போல் ரஷ்யாவைச் சேர்ந்த கிரில் ஜிவோர்ஜியன் துணைத் தலைவராக உள்ளார்.
அந்த 15 உறுப்பினர்களில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரியும் ஒருவர். அவர் முதன் முதலில் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது 2012, ஏப்ரல் 27ம் தேதியாகும். அப்போது இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திலிருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி.
இவரது பதவிக் காலம் 2018 பிப்ரவரியில் முடிய இருந்த நிலையில், 2017 நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. அதில் பிரிட்டன் சார்பில் போட்டியிட இருந்த கிறிஸ்டோபர் க்ரீன்வுட்டைப் போட்டியிலிருந்து விலகினார். அந்த தேர்தலில் 193 வாக்குகளில் தல்வீர் பண்டாரி 183 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து 2018 பிப்ரவரியில் இரண்டாவது முறையாகச் சர்வதேச நீதிமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த சர் பெனகல் ராவ் என்பவர் 1952 முதல் 1953 வரையிலும், ரகுநந்தன் ஸ்வரூப் பதக் என்பவர் 1989 முதல் 1991 வரையிலும் சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்துள்ளனர். மேலும், அந்நீதிமன்றத்தில் நாகேந்திர சிங் என்பவர் 1973 முதல் 1988 வரை உறுப்பினராகவும், 1985 முதல் 1988 வரையில் துணைத் தலைவராகவும், 1976 முதல் 1979 வரையில் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தின் தலைவராக இருந்தார் எனில் அது நாகேந்திர சிங் மட்டும்தான். அவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட போது, அதாவது 1976ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.
முடிவு :
நம் தேடலில், சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு மோடியின் ராஜ தந்திரமே காரணம் எனப் பரப்பப்படுவது உண்மை அல்ல.
இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராக மட்டுமே உள்ளார். அதுவும் 2012ம் ஆண்டு முதலே அவர் உறுப்பினராக இருந்து வருகிறார்.
சர்வதேச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி என்ற பதவியே கிடையாது. தலைவர் பதவி மட்டுமே உள்ளது. அப்பதவியில் அமெரிக்காவைச் சார்ந்த ஜோன் இ.டோனோக் என்பவர் உள்ளார்.