ஆளையே மறைய வைக்கும் துணி கண்டுபிடிப்பு என எடிட்டிங் வீடியோவை பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி !

பரவிய செய்தி
ஆளையே மறைய வைக்கும் துணியை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவின் பண்டைய புத்தகங்களில் சொல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறதா ?
மதிப்பீடு
விளக்கம்
ஜப்பான் நாட்டில் ஆளையே மறைய வைக்கும் துணியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இவை இந்தியாவின் பண்டைய புத்தகங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறதா என மரியா வ்ரித்(Maria Wirth) என்பவர் தனது ட்விட்டர் கணக்கில் இவ்வீடியோவை பதிவிட்டிருந்தார். இதனைத் துக்ளக் குருமூர்த்தி தனது ட்விட்டர் கணக்கில் ரீட்வீட் செய்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவை “ஒரே போர்வை.. கண்ணுக்குத் தெரியாமல் மறைந்த பெண்” என்றத் தலைப்பில் நியூஸ்தமிழ் 24*7 செய்தித்தளம் ட்ரெண்டிங் வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
Japanese scientists discovered invisibility..😳😳
நம்ம ஊருக்கு எப்ப வரும் 🤔🤔pic.twitter.com/QUjYX6CYBG— THALAIVARS SOLDIER (@sureshkumaar77) November 18, 2022
உண்மை என்ன ?
வைரலான வீடியோவின் உண்மைக் குறித்து இணையத்தில் தேடியபோது, ஆளையே மறைய வைக்கும் துணிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவை வெறும் வீடியோ எடிட் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படுபவை என்றும் அறிய முடிகிறது.
திரைப்படங்களில் அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ள படங்களில் பச்சை திரை வைத்து வீடியோ எடுக்கப்பட்டு அதனை எடிட் செய்து தங்களுக்கு ஏற்றார் போல் கிராஃபிக்ஸ் செய்துகொள்வர்.
பாகுபலி போன்ற பல திரைப்படங்களில் பச்சை திரை வைத்து வீடியோ எடுக்கப்பட்டு அதனை எடிட் செய்த வீடியோக்கள் பல யூட்யூப் தளத்தில் உள்ளது.
தற்போது வைரலான வீடியோவை உற்று நோக்கியதில் வீடியோவின் ஓரத்தில் பச்சை நிறத்தில் ஒரு கோடு இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதிலிருந்து, இந்த வீடியோ பச்சை நிற திரையை வைத்து எடுக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிகிறது.
2012 மே மாதம் டஸ்டின் மெக்லீன்(Dustin McLean) என்பவர் ஆளையே மறைய வைக்கும் துணியின் பின்னணி என்ன என்ற தலைப்பில் தனது யூட்யூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஆளையே மறைய வைக்கும் துணிகள் எனும் வீடியோக்களில் இருக்கும் தந்திரங்கள் குறித்து அதில் விவரித்துள்ளார்.
இதேபோல், மற்றொரு வீடியோ குறித்து யூடர்ன் தளம் 2018ம் ஆண்டே ஃபேக்ட்செக் செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது.
மேலும் படிக்க : ஆளையே மறைய வைக்கும் துணி: புதிய கண்டுபிடிப்பா ?
முடிவு :
நம் தேடலில், ஆளையே மறைய வைக்கும் துணியை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஒரு பெண் துணியின் பின்னால் மறைவது போன்ற வீடியோ எடிட்டிங் மூலம் செய்யப்பட்டது.
மேலும், எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோவை இந்தியாவின் பண்டைய புத்தகங்களில் குறிப்பிட்டது என பகிரப்பட்ட தவறான பதிவை துக்ளக் குருமூர்த்தி பகிர்ந்து இருக்கிறார் என அறிய முடிகிறது.