பாலியல் வன்புணர்வின் போது தன்னை தற்கொள்ள பெண் சுட்டாலும் குற்றவாளி அல்ல – ஏ.டி.ஜி.பி ரவி

பரவிய செய்தி
ஒரு பெண்ணை ஒருவன் கற்பழிக்க முயன்றால் அப்பெண் அவனை சுட்டாலும் அவர் குற்றவாளி இல்லை. தற்காப்பிற்காக சுட்டதாகவே கொள்ளப்படும். எனவே தைரியமாக செயல்படுங்கள் – ரவி (ஏ.டி.ஜி.பி)
Facebook link | archive link
மதிப்பீடு
விளக்கம்
தனக்கு பாலியல் வன்கொடுமை நடக்கும் போது அப்பெண் தன்னை தற்காத்து கொள்ள அந்நபரை சுட்டுக் கொன்றாலும் குற்றமில்லை என தமிழக காவல்துறை அதிகாரி ஏ.டி.ஜி.பி ரவி கூறியது மீம்ஸ் வடிவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அப்படியொரு சட்டம் இருக்கிறதா என்றால், ” ஆம் ” இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தந்தி டிவி சேனலுக்கு பேட்டி அளித்த ஏ.டி.ஜி.பி ரவி அவர்கள், ” ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சிக்கும் போது அந்த நபரை தற்காப்பிற்காக அப்பெண் கொலை செய்து விடுகிறார்கள். அப்போது என்ன நடக்கும்… சட்டப்படி ஒரு வழக்கு பதிவு செய்து, காவல்துறை விசாரணை செய்து, இது தற்காப்பிற்காக சம்பந்தப்பட்ட நபரை அப்பெண் கொலை செய்தார் என விசாரணையில் தெரிய வந்தால் எந்தவிதமான தண்டனையும் இல்லை. நீதிமன்றம் செல்லாமலேயே காவல்துறை விசாரணையில் முடித்து விடலாம் ” எனக் கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு பொள்ளாச்சி சம்பவம் நிகழ்ந்த போதே ” IPC Section 100 ” குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அப்பொழுதே ஐபிசி பிரிவு 100 என்ன மாதிரியான பாதுகாப்பை வழங்குகிறது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
“ IPC Section 100 ” என்ற பிரிவின் கீழ், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், கடத்தல், ஆசிட் தாக்குதல் அல்லது ஆசிட் தாக்குதல் முயற்சியின் போது, பாலியல் வன்புணர்வு போன்ற ஆபத்தான நிலையில் எதிர் தாக்குதல் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற உயிர்க்கு ஆபத்தான தாக்குதலின் போது எதிராளிக்கு மரணம் ஏற்பட்டாலோ, உடற்காயங்கள் ஏற்பட்டாலோ அது சட்டப்படி குற்றமாகாது. இந்த உரிமையை பெண்கள் மட்டுமல்லாமல் இந்திய குடிமக்கள் அனைவருக்குமானது என இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கிறது.