This article is from Jan 07, 2020

ஈரான் ராணுவ தளபதி அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்ட வீடியோவா ?

பரவிய செய்தி

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்ட வீடியோ பதிவை அமெரிக்கா வெளியிட்டது.

மதிப்பீடு

விளக்கம்

ஜெனரல் காசெம் சுலேமானீ ஈரான் நாட்டின் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர். சில தினங்களுக்கு முன்பாக இராக் நாட்டில் உள்ள அமெரிக்க நாட்டின் படையினர் காசெம் சுலேமானீயை கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அமெரிக்க-ஈரான் இடையே மோதல் உருவாகக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

Facebook link | archived link 

இந்நிலையில், காசெம் சுலேமானீயை அமெரிக்க ராணுவ படையினர் கொன்ற வான்தாக்குதலின் வீடியோ என ஓர் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய அளவில் பகிரப்பட்டு வரும் வீடியோ தற்பொழுது தமிழும் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிட தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

1.41 நிமிடம் கொண்ட வீடியோவில் கார்களின் மீது குண்டு மழையை தொடர்ந்து பொழியும் பொழுது, வீடியோவின் பின்னே குரல் ஒன்று பதிவாகி இருக்கிறது. மேலும், வீடியோவின் இறுதியில் கார்களை சுட்டுத்தள்ளும் பொழுது அதிலிருந்து ஆட்கள் ஓடும் காட்சி பதிவாகி இருக்கிறது.

Youtube link | archived link

மேலும், வீடியோ மேலே “WHOT” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. “WHOT” எனத் தேடிப் பார்த்தால், வீடியோ கேம்ஸ் குறித்த வீடியோக்களை காண்பிக்கிறது. இதையடுத்து, தொடர்ந்து தேடிப் பார்க்கையில், 2014-ல் ” AC-130 Gunship Simulator: Special Ops Squadron [working title] ” என்ற தலைப்பில் வைரலாகும் வீடியோவை ஒத்த வீடியோ Byte Conveyor Studios என்ற யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

Youtube link | archived link

2015-ல் Byte Conveyor Studios சேனல் “AC-130 Gunship Simulator – Convoy engagement” என்ற தலைப்பில் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் உண்மையான பதிவை பதிவிட்டு உள்ளது. அதில், செல்போன் தளத்தில் பயன்படுத்தக்கூடிய கேம்ஸின் டெவெலப்மென்ட் ப்ரீவியூ எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

1998-ம் ஆண்டு முதல் காசெம் சுலேமானீ இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு ஒன்றின் தலைவராக இருந்தார். இந்த படைப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கையை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

இராக் நாட்டில் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து இரண்டு கார்களில் சுலேமானீ மற்றும் இரான் ஆதரவு பெற்ற போராளிகள் செல்லும் பொழுது அமெரிக்க ட்ரோனால் தாக்கப்பட்டனர். அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் மூன்று ராக்கெட்கள் தாக்கியதில் சுலேமானீ உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை அமெரிக்க வெளியிடவில்லை.

இந்நிலையில்தான், 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வீடியோ கேம்ஸ் காட்சியை ஈரான் தளபதியை அமெரிக்க ட்ரோன் தாக்கிய வீடியோ என சமூக வலைதளங்களில் தவறாக பகிர்ந்து வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader