ஈரான் நீதிமன்றம் ரொனால்டோவுக்கு 99 கசையடிகளைத் தண்டனையாக விதித்ததாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓவியம் வரைந்த பாத்திமா ஹமாமி (85% உடல் செயலிழந்த ஓவியர்) என்ற பெண்ணை தொட்டதற்காக ஈரான் அரசு அவருக்கு 99 கசையடிகளை விதித்தது. இஸ்லாமிய நீதிமன்றங்கள் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுகின்றன. அவர் நாடு திரும்பினால் தண்டனை நிறைவேற்றப்படும்.

X link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பாத்திமா ஹமாமி என்ற பெண் ஓவியர் தான் வரைந்த ஓவியத்தை பரிசாகக் கொடுத்துள்ளார். அவர் 85 சதவீதம் உடல் செயலிழந்தவர். அவரை அன்பின் காரணமாக ரொனால்டோ அணைத்துக் கொண்டார். 

ரொனால்டோவின் இச்செயலுக்கு ஈரானிய வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததாகவும், அதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் அவருக்கு 99 கசையடிகளை விதித்ததாகவும் வலதுசாரிகள் மற்றும் Megh Updates, Times Algebra உள்ளிட்ட பக்கங்களும் பரப்பி வருகின்றன. ஈரான் விதித்ததாகக் கூறப்படும் இந்த தண்டனையுடன் இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மையை (secularism) ஒப்பிட்டு சில தகவல்களையும் பரப்புகின்றனர்.

Archive link  

X link | Archive link 

உண்மை என்ன ? 

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஈரான் அரசு 99 கசையடிகளைத் தண்டனையாக விதித்ததாகப் பரவும் தகவல் குறித்து ஆய்வு செய்ததில் அது ஒரு பொய் என்பதை அறிய முடிந்தது.

இது பற்றி முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ரொனால்டோவை பாத்திமா ஹமாமி (Fatemeh Hamami) என்ற ஓவியர் சந்தித்தது தொடர்பாகக் கடந்த செப்டம்பர் 20ம் தேதி ‘Khaleej Times’, ‘Siasat’ போன்ற தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. 

அதில், பாத்திமா ஹமாமி ரொனால்டோவை சந்தித்தது மட்டுமின்றி அவர் ஓவியம் வரையும் படங்களும் உள்ளன. இது போன்ற பல ஓவியங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் காண முடிகிறது. 

இந்த சந்திப்பின் போது அரவணைத்ததற்காக ரொனால்டோவிற்கு தண்டனை ஏதும் ஈரான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளதா எனத் தேடியதில் அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 

இப்படிப் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஸ்பெயினில் உள்ள ஈரான் தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஈரானில் எந்த ஒரு சர்வதேச விளையாட்டு வீரருக்கும் எதிராக எந்த நீதிமன்ற தீர்ப்பும் வழங்கப்படுவதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். இவ்வாறு எந்தவித அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களையும் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன தேசத்திற்கு எதிரான போர்க்குற்றங்களையும் மறைத்துவிடும் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

X post link

கிறிஸ்டியானோ ரொனால்டோ செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஈரானுக்கு கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காகப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா ஹமாமி உடனான அவரது நேர்மையான மற்றும் மனிதாபிமான சந்திப்பு மக்களாலும் நாட்டின் விளையாட்டு அதிகாரிகளாலும் பாராட்டப்பட்டது” என்றுள்ளது.

இதன் மூலம் ரொனால்டோ மீது ஈரான் நீதிமன்றம் அப்படி எந்த தண்டனையையும் விதிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : சவூதி அரேபியாவில் ரொனால்டோவுக்கு தங்கத்தால் ஆன பைக் பரிசளித்ததாகப் பரவும் பொய் !

இதற்கு முன்னர் ரொனால்டோ குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : குளிர்பான பாட்டில்களை ஒதுக்கிய ரொனால்டோ.. 4 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்த கோக்க கோலா !

முடிவு : 

நம் தேடலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை சந்திக்க வந்த பாத்திமா ஹமாமி என்ற பெண்ணை அணைத்ததற்காக, அவருக்கு ஈரான் நீதிமன்றம் 99 கசையடிகளைத் தண்டனையாக விதித்தது எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அப்படி எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader