இரணியல் வார்டில் திமுக 1 ஓட்டு வாங்கியதாக தவறானத் தலைப்பை வைத்த கதிர் நியூஸ் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இரணியல் பேரூராட்சி வார்டில் திமுக ஒரு ஓட்டு மட்டும் வாங்கியதாக பாஜக ஆதரவு இணையதளமான கதிர் நியூஸ் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியின் 4வது வார்டில் திமுக போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர் ரெத்னாபாய் போட்டியிட்டு இருக்கிறார்.
கதிர் நியூஸ் இணையபக்கத்தில், இரணியல் பேரூராட்சியின் 4-வது வார்டில் மொத்தம் உள்ள 283 வாக்குகள் பதிவான நிலையில் 147 வாக்குகளை பெற்று பாஜகவைச் சேர்ந்த கிரிஜா வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 74 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் ரெத்னாபாய் 61 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், திமுகவைச் சேர்ந்த முருகன் 1 ஓட்டு வாங்கினார் ” என இடம்பெற்று இருக்கிறது.
திமுகவைச் சேர்ந்தவர் சுயேட்சையாக நின்று ஒரு ஓட்டு வாங்கியதை திமுக ஒரு ஓட்டு வாங்கியதாக தலைப்பை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் சீட்டு வழங்காமலோ அல்லது அந்த வார்டை கூட்டணி கட்சிக்கு அளித்த இடங்களில் பலர் சுயேட்சையாக போட்டியிட்டு உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், இரணியல் பேரூராட்சியின் 4-வது வார்டில் திமுக ஒரு ஓட்டு வாங்கியதாக கதிர் நியூஸ் வைத்த தலைப்பு தவறானது. திமுகவைச் சேர்ந்தவர் சுயேட்சையாக நின்று ஒரு ஓட்டு வாங்கியதாக உள்ளே செய்தியை வைத்து விட்டு, வெளியே திமுக வாங்கியதாக தவறான தலைப்பை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர் என அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
இரணியல் பேரூராட்சியின் 4-வது வார்டில் போட்டியிட்டு 1 ஓட்டு வாங்கிய முருகன் என்பவர் திமுகவைச் சேர்ந்தவரே இல்லை என்று பொய்யான தகவலை நாம் வெளியிட்டதாக Fervid indian எனும் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதுகுறித்து, வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.
நமது கட்டுரையில் 1 ஓட்டு வாங்கிய முருகன் என்பவர் திமுகவைச் சேர்ந்தவரே அல்ல என நாம் கூறவில்லை. திமுகவைச் சேர்ந்தவர் சுயேட்சையாக நின்று உள்ளார் என்றேக் குறிப்பிட்டு உள்ளோம். இதைத்தான் கதிர் பக்கமும் செய்தி உள்ளே வைத்து இருக்கிறது. ஆனால், தலைப்பில் திமுக என கூறியுள்ளது.
தேர்தல் வேட்புமனுவில் முருகன் திமுக சார்பாக நிற்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இரணியல் பேரூராட்சியின் 4-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களில், முருகன் சுயேட்சையாக தான் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு வேட்பாளர் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடுவதாக கூறினாலும், அதை அந்த கட்சி அங்கீகரித்தால் மட்டுமே அந்த கட்சியின் வேட்பாளர் ஆவார். இல்லையென்றால், சுயேட்சையே. ஆகையால் தான், தேர்தல் ஆணையம் முருகனை சுயேட்சை எனக் குறிப்பிட்டு உள்ளது. அந்த வார்டில் திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் நின்று உள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்த குழப்பத்திற்கு காரணமான கதிர் இணையப்பக்கத்தின் செய்தியில் முதலில் திமுக வேட்பாளர் 1 ஓட்டு வாங்கினார் என செய்தியை வெளியிட்டு, பின்னர் திமுகவைச் சேர்ந்தவர் சுயேட்சையாக நின்று 1 ஓட்டு வாங்கியதாக மாற்றி உள்ளனர். பிப்ரவரி 22-ம் தேதி வெளியிட்ட செய்தியை 23-ம் தேதி மாற்றி இருப்பதை பார்க்கலாம்.
இதையறியாமல், இரணியல் பேரூராட்சியின் 4-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் முருகன் திமுக கட்சியைச் சேர்ந்தவரே இல்லை என நாம் கூறியதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.