“அயர்ன் மேன்” நடிகர் தன் குழந்தைகளுடன் பஜனை பாடுவதாக பரவும் வதந்தி !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
அயர்ன் மேன் மற்றும் அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் கிறிஸ்துமஸ் கொண்டுவதை தவிர்த்து கிருஷ்ணா ஜெயந்திக்கு தன் குழந்தைகள் உடன் ஹரே ராமா… ஹரே கிருஷ்ணா எனும் பாடலை பாடிக் கொண்டுவதாக 3 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருக்கும் நபரை பார்க்கையில், நடிகர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் தோற்றத்திலேயே இல்லை. வேறொரு நபரே என தெளிவாய் தெரிகிறது.
வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஏப்ரல் மாதம் கொரோனா லாக்டவுன் சமயத்தில் 300 ஸ்பார்ட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஜெரார்ட் பட்லர் தன் குழந்தைகள் உடன் ஹரே ராமா பாடி ஆடுவதாக இதே வீடியோ பரப்பப்பட்டு இருக்கிறது.
நடிகர் ஜெரார்ட் பட்லர் 2020 புத்தாண்டு சமயத்தில் இந்தியாவில் உள்ள வாரணாசிக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு செய்திகள் 2020 ஜனவரியில் வெளியாகி இருக்கிறது. அதில் உள்ள தோற்றத்திற்கும், வீடியோவில் இருக்கும் நபரின் தோற்றத்திற்கும் கூட வேறுபாடு இருக்கிறது.
மேலும், வைரல் செய்யப்படும் வீடியோவில் இருக்கும் நபர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் என்றோ அல்லது ஜெரார்ட் பட்லர் என்றோ எந்தவொரு செய்தியும், அதிகாரப்பூர்வ பதிவுகளும் இல்லை. வெறும் வதந்தி மட்டுமே.
முடிவு :
நம் தேடலில், அயர்ன் மேன் நடிகர் ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை குழந்தைகளுடன் ஆனந்தமாக பஜனையுடன் ஆடிப்பாடுவதாக வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது ராபர்ட் ஜான் டவுனி அல்ல, ஹாலிவுட் நடிகர் ஜெரார்ட் பட்லரும் அல்ல என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.