ஈஷா மையத்தின் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததா ?| ஈஷா மீது எழும் வேறொரு குற்றச்சாட்டு!

பரவிய செய்தி

ஈஷா யோக மையத்தை சுற்றி காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மின்சார வேலியில் சிக்கி யானை மடிந்துப் போயிருக்கின்றது. அந்த கஞ்சா குடிக்கிக்கு எதிராக எந்த சட்டமும் பாயாது. அரை போதை சங்கிகளும் இதற்கு எதிரா குரல் எழுப்ப மாட்டார்கள்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கோவை ஈஷா யோக மையத்தைச் சுற்றி காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்து உள்ளதாக யானை இறந்தும் கிடக்கும் புகைப்படங்கள் மற்றும் கட்டிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் வேலியின் புகைப்படங்கள் இணைக்கப்பட்ட பதிவு வைரல் செய்யப்பட்டு வருகிறது. ஈஷா யோகா மையத்தை குறிப்பிட்டு ஆயிரக்கணக்கில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

ஈஷா யோகா மையத்தில் மின்வேலி தாக்கி யானை உயிரிழந்தது தொடர்பாக பரவும் செய்தி குறித்த உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

கோவையில் யானை உயிரிழப்பு குறித்து தேடுகையில், ” கோவை அருகே ஆண் யானை விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்தம் தாக்கி இறந்துள்ளது, இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் ” என ஜனவரி 5-ம் தேதி வெளியான மாலைமலர் செய்தியில் வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. யானை இறந்த சம்பவம் செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.

” கோவை தென்னம நல்லூரைச் சேர்ந்த துறை என்ற ஆறுச்சாமி செம்மேடு அருகே உள்ள குளத்தேரி பகுதியில் உள்ள ஓர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். நெற்பயிரிகளை யானை மற்றும் காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க தனது தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்து இருந்துள்ளார்.

Advertisement

இரவு 12 மணியளவில் 15 மற்றும் 22 வயது தக்க இரு ஆண் யானைகள் துரையின் தோட்டத்துக்குள் நுழைந்து பயிர்களை தின்றுள்ளன. 22 வயது தக்க யானை தோட்டத்தில் இருந்து வெளியேறும் போது மின்வேலியை மிதித்தலில் மின்சாரம் தாக்கி உள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காப்பாற்ற முயன்றும் யானை பரிதாபமாக உயிரிழந்தது ” எனச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பேட்டரி அல்லது சூரிய ஒளியில் இருந்து எடுக்கப்படும் சாக் அடிக்கும் சிறிய அளவில் பாயும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு தெரிவித்து வருகிறது. நிலத்தில் உயர் மின்னழுத்தம் கொண்ட இணைப்புகளை வைப்பது சட்ட விரோதமா பார்க்கப்படுகிறது. யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக துரை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈஷா மீதான குற்றச்சாட்டும், மறுப்பும் :

ஈஷா மையத்தில் சுற்றியுள்ள மின்வேலியில் யானை சிக்கி உயிரிழந்ததாக பரவும் தகவல் தவறானது. இருப்பினும், விவசாய தோட்டத்தில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்ததற்கு ஈஷா மையத்தை சேர்ந்தவர்கள் யானையை விரட்டியதே காரணமென ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் தரப்பில்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் தற்போது இல்லை. ஆனால், இப்பகுதியில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை பரிசோதித்தால் யானையைத் துரத்திய நபர்களை காணலாம் எனக் கூறுகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர். எனினும், உள்ளூர்வாசிகள் அல்லது ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் யானையைத் துரத்தி இருக்கலாம் என எழும் குற்றச்சாட்டை மாவட்ட வன அலுவலர் மறுத்துள்ளார்.

” யானைகளை விரட்டுவது எங்கள் குழுக்களால் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே செய்யப்படுகிறது. யானைகளை துரத்தினால் திரும்பி வந்து அவர்களை தாக்கும் என்பதை அறிந்திருப்பதால் உள்ளூர் மக்கள் யானைகளை விரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை ” என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாக டிஎன்எம் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

 

இதற்கிடையில், மக்கள் பத்திரிக்கையாளர் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள சிவா எம் எனும் ட்விட்டர் பக்கத்தில் ஈஷா மையத்தைச் சேர்ந்தவர்கள் யானையை துரத்தியதாக தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்புவதும், அதற்காக ஈஷா மையம் பதில் அளித்த ட்வீட் மோதல் குவிந்துள்ளது.

Twitter link | Archive link 

முடிவு : 

நம் தேடலில், ஈஷா மையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததாக பரவும் தகவல் தவறானது. விவசாய நிலத்தில் இருந்த மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது என அறிய முடிகிறது.

ஆனால், யானைகளை விரட்டியது ஈஷா மையத்தைச் சேர்ந்தவர்கள் என உள்ளூர் விவசாயிகள் மற்றும் ஆர்வலர்களால் குற்றச்சாட்டு எழுகிறது. அந்த குற்றச்சாட்டை மாவட்ட வன ஆர்வலர் மறுத்து இருக்கிறார். அதேநேரத்தில், யானைகள் குறித்து உள்ளூர்வாசிகள் மற்றும் ஆர்வலர்களின் குற்றச்சாட்டுகளை அப்படியே புறம் தள்ள முடியுமா என்கிற கேள்வியும் இருக்கிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button