ஐஎஸ்ஐஎஸ் பெண்களை ஏலம் விடும் சந்தை, 38 இந்து பெண்கள் மீட்கப்படும் காட்சி எனப் பரவும் தவறான வீடியோக்கள் !

பரவிய செய்தி

இந்தப் புகைப்படம் என்னை கோபம் மற்றும் வருத்தமடைய வைக்கிறது. IS (தேசம்) பாலியல் அடிமைகளை விற்கும் சந்தை தான் இது. தலை முதல் கால் வரை முழுவதுமாக ஹிஜாப் அணிந்து, அவர்கள் யாருக்கு விற்கப்படுகிறார்களோ அவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். 21ம் நூற்றாண்டிலும் பெண்களை பாலியல் அடிமைகள் போல் நடத்துபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது அருவருப்பாகவும் மற்றும் பயங்கரமானதாகவும் இருக்கிறது.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

யுதம் தாங்கிய இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதக் குழுவான ஐஎஸ்ஐஎஸ்(ISIS) அமைப்பானது ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்களை பாலியல் அடிமைகளாக ஏலம் விடும் சந்தை எனக் கூறி இஸ்லாமியர் ஒருவர் ஹிஜாப் முகத்திரையை விலக்கி பெண்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் வரிசையாக பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது.

இதேபோன்று இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 38 இந்து பெண்கள் ஐஎஸ்ஐஎஸ்(ISIS) அமைப்பின் கூடாரங்களில் பாலியல் அடிமைகளாக இருந்துள்ளனர் என்றும், அவர்களை இராணுவத்தினர் மீட்டு விட்டதாகவும் கூறி இன்னொரு வீடியோவும் வலதுசாரிகளால் சமூக வலைதளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அதில் தி கேரளா ஸ்டோரி சம்பவம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive Link

Archive Link

உண்மை என்ன ?

  1. ஈராக்கின் எர்பில் நகரில் எடுக்கப்பட்ட நாடகக்கலை நிகழ்ச்சியின் வீடியோ:

பரவி வரும் முதல் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2023 மே 7 அன்று ‘Zhyar M Barzani‘ என்னும் பயனர் இதன் முழு வீடியோவை Tiktok வலைதள பக்கத்தில் “By : Aryan Rafiq, Art performans, The Unheard Screams Of The Ezidkhan Angels 2023” என்ற தலைப்பில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. மேலும் இந்த வீடியோவின் முதல் 22 வினாடிகள் பரவி வரும் வைரல் வீடியோவுடன் சரியாகப் பொருந்துவதையும் காண முடிந்தது.

 

மேலும் இதுகுறித்து, மேலே உள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளவாறு Aryan Rafiq என்பவரின் பெயரில் சமூக வலைதளங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த மார்ச் 8 அன்று நாடகத்தில் நடிப்பதற்கான அழைப்பைப் பகிர்ந்துள்ள அவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில், நிகழ்வு நடக்கவுள்ள தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “எஜித்கான் தேவதைகளின் கேட்கப்படாத அலறல்கள், நாடக அரங்கேற்றம், இயக்கம்: ஆர்யன் ரஃபிக், 2023 மார்ச் 8, ஆரம்பமாகும் நேரம் மாலை 3:00 மணி.” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் அந்த நாடகத்தின் இயக்குனர் என்பதையும் உறுதி செய்ய முடிந்தது.

இதன் மூலம், மார்ச் 2023ல் ஈராக்கின் எர்பில் நகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் பெண்கள் ஏலம் விடுவதை காண்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட நாடக கலை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை உண்மையாக ஏலம் விடும் சந்தையில் எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிகிறது.

2. 38 இந்து பெண்களை மீட்கும் வீடியோவா ?

அடுத்ததாக, ஐஎஸ்ஐஎஸ்(ISIS) அமைப்பின் கூடாரங்களில் பாலியல் அடிமைகளாக இருந்த இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 38 பெண்களை மீட்கும் காட்சி எனக் கூறி பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் உண்மையான வீடியோவை SDF PRESS என்னும் யூடியூப் பக்கத்தில் காண முடிந்தது.

2022 செப்டம்பர் 6 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவின் தலைப்பு “பெண்கள் பாதுகாப்பு பிரிவுகள் மூலம் அல்-ஹவ்ல் முகாமிலிருந்து நான்கு பெண்களை விடுவித்ததை ஆவணப்படுத்தும் வீடியோ” என்று அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் RepublicWorld.Com என்னும் ஊடகம் 2022 செப்டம்பர் 18 அன்று இதுகுறித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் “அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான Syrian Democratic Forces (SDF) என்னும் அமைப்பு சிரியாவின் டமாஸ்கஸின் வடகிழக்கில் உள்ள அல்-ஹோல் முகாமிலிருந்து செப்டம்பர் 17, சனிக்கிழமையன்று இஸ்லாமிய அரசுடன் (ISIS) தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை ‘Operation Security and Humanity’ என்னும் 24 நாள் இரகசிய இராணுவ நடவடிக்கை மூலம் மீட்டது.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

மேலும் அதில் “SDF வீரர்களால் பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நடவடிக்கையின் போது பெரும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராணுவ சீருடைகள் மற்றும் 16 மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive Link

இது குறித்து, U.S. Central Command அமைப்பு தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் 2022 செப்டம்பர் 7 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகவல்களில் மீட்கப்பட்டவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் படிக்க : அரபு நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் சந்தையா ?| உண்மை என்ன?

முடிவு:

நம் தேடலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பானது ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்களை பாலியல் அடிமைகளாக ஏலம் விடும் சந்தை எனக் கூறி பரப்பப்படும் வீடியோ, மார்ச் 2023ல் ஈராக்கின் எர்பில் நகரில் எடுக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான நாடகக்கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்பதை அறிய முடிகிறது.

இதேபோன்று 2022ல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கூடாரங்களில் பாலியல் அடிமைகளாக இருக்கும் பெண்கள், குழந்தைகள் ராணுவ அமைப்பால் மீட்ட வீடியோவை இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 38 இந்து பெண்கள் மீட்கப்பட்டதாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni is working as a Sub-Editor in You Turn. She completed her Masters in History from Madras university. She holds her Bachelor’s degree in Engineering and holds a Bachelor’s degree in Tamil Literature. She is the former employee of IT Company. She currently finds the fake news in social media in order to verify the factual accuracy.
Back to top button