இஸ்லாமிய நாட்டில் பெண்களை சங்கிலியில் கட்டி விற்பனைக்கு அழைத்துச் செல்வதாக பரவும் எடிட் செய்த படம் !
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களால் அந்நாட்டில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஈரானின் ஹிஜாப் விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளில் பெண்களை சங்கிலியால் பூட்டி சந்தையில் விற்பனைச் செய்ய இழுத்து வரும் காட்சி எனக் கூறி மூன்று பெண்களை ஒரு ஆண் சங்கிலியில் பூட்டி இழுத்து செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இஸ்லாமிய பெண்களை சங்கிலியால் பூட்டி அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2021 marca எனும் இணையதளத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களை சங்கிலியில் பூட்டி அழைத்து செல்லும் புகைப்படம் போலியானது என வெளியான செய்தியில் உள்ள புகைப்படத்தில் சங்கிலி இடம்பெறவில்லை.
2014-ம் ஆண்டு 50 shades of gray hair எனும் இணையதளத்திலும் வெளியான படத்தில் பெண்கள் சங்கிலி இல்லாமலேயே நடந்து செல்வது இடம்பெற்று இருக்கிறது.
2014 ஜனவரி 1ம் தேதி வெளியான ” Female infanticide : Between sacred texts and the masculine complex ” என்ற புத்தகத்தின் அட்டைப் படத்தில் ஹிஜாப் அணிந்த பெண்கள் நடந்து செல்லும் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
வைரல் செய்யப்படும் புகைப்படம் 2003ம் ஆண்டு ஈராக் நாட்டில் இருந்து Murat Duzyol எனும் புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது. இந்த படம் எடிட் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்டதாகவும் தவறாக பரப்பப்பட்டது.
மேலும் படிக்க : அரபு நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் சந்தையா ?| உண்மை என்ன?
இதற்கு முன்பாக, அரசு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை என ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெண்களை பாலியல் அடிமையாக ஏலம் விட்டு நடத்திய நாடகத்தை தவறாக பரப்பி இருந்தனர்.
மேலும் படிக்க : ஆப்கானில் பெண்களை விற்பதாகவும், சாலையில் சுட்டுக் கொல்வதாக பரவும் பழைய வீடியோக்கள் !
முடிவு :
நம் தேடலில், இஸ்லாமிய நாடுகளில் பெண்களை சங்கிலியால் பூட்டி சந்தையில் விற்பனைச் செய்ய இழுத்து வரும் காட்சி எனப் பரப்பப்படும் புகைப்படம் தவறானது. ஹிஜாப் அணிந்த பெண்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சியை எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.