இஸ்ரேல் உருவாக்கிய ரோபோ ராணுவ வீரர் ?| வைரல் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி
உலகையே கிடுகிடுக்க வைத்த இஸ்ரேல் உருவாக்கிய ரோபோ ராணுவ வீரர்.
மதிப்பீடு
விளக்கம்
மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை ராணுவ பணிக்கு பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு காட்சிகளை திரைப்படங்களில் பார்த்து இருப்போம். தற்பொழுது, அதனை மெய்யாக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தின் சார்பில் ரோபோக்களை ராணுவ வீரராக உருவாக்கி வருவதாக ஓர் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அக்டோபர் 30-ம் தேதி பத்திரிக்கை யாளன் என்ற முகநூல் பக்கத்தில் இஸ்ரேல் உருவாக்கிய ராணுவ வீரர் என பதிவான வீடியோ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்கள் மற்றும் ஆயிரத்தில் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
இது மட்டுமின்றி, பல முகநூல் குழுக்கள், பக்கங்கள், கணக்குகளில் பதிவான ரோபோ வீடியோ ஆயிரக்கணக்கில் ஷேர் ஆகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனை கண்டு ஆச்சரியமடையும் மக்கள் அதிகம் ஷேர்களை செய்து வருகிறார்கள். ஆகையால், இதன் உண்மை குறித்து ஆராய்ந்து பார்க்க முயன்றோம்.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ தமிழில் இஸ்ரேல் என பகிரப்படுவது போன்று இந்தியாவின் பிற மாநிலங்களில் அமெரிக்காவில் உருவாக்கிய ராணுவ ரோபோ என வைரலாக்கி உள்ளனர் என்பதை அறிய முடிந்தது.
அதில், ” இது திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட சிஜி ரோபோ அல்ல. உண்மையான அமெரிக்க டெல்டா ஃபோர்ஸ் ” ரோபோட் ” ஆனது நேற்று சிரியாவில் பயங்கரவாதிகளை கொல்வதற்காக மேற்கொண்ட பயிற்சி ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தமிழில் இஸ்ரேல் நாட்டின் ராணுவ ரோபோ என்றும், பிற மாநிலங்களில் அமெரிக்காவின் ராணுவ ரோபோ என்றும் பகிர்ந்து வைரலாக்கி இருக்கிறார்கள். இதில் இருக்கும் முரண்களை வைத்தே தவறாக புரிந்து கொண்டு பரப்பி உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இது எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து விரிவாக தேடினோம் .
வீடியோவின் கீழே ” Bosstown Dynamics ” எனும் வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடிய பொழுது, யூட்யூப் தளத்தில் ரோபோ குறித்து வீடியோக்கள் கிடைத்தன. அதில், மூன்றாவது வீடியோவாக ” We used CGi to Fake Military Robots ” என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பாகத்தான் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்
” Bosstown Dynamics: VFX Before & After Reveal ” என்ற தலைப்பில் வெளியான மற்றொரு வீடியோவில் VFX செய்வதற்கு முன்பாக , செய்த பிறகும் என காட்சிகளை பிரித்து காண்பித்து இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் முழு நீள வீடியோவை மேலே காணலாம். அதில், மனிதர்களை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், அவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கிறார்கள் என்பதை 2-வது நிமிடத்தில் காணலாம்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காம்பாட் ரோபோவின் வீடியோவை அமெரிக்க, இஸ்ரேல் நாட்டின் ரோபோ ராணுவ வீரர் எனத் தவறாக இந்திய அளவில் பரப்பி வைரலாக்கி இருக்கிறார்கள்.
முடிவு :
நம்முடைய ஆய்வில் இருந்து, இஸ்ரேல் நாட்டின் ரோபோ ராணுவ வீரர் என அதிக அளவில் வைரலாகிய வீடியோ டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ மட்டுமே. உண்மையான ராணுவ ரோபோ அல்ல என்பது அறிந்து இருப்பீர்கள்.
ஒரு வீடியோவை தவறான தகவலுடன் வைரலாக்காமல், உண்மையான செய்திகளை அதிகம் பகிரச் செய்யுங்கள்.