ISRO-க்கும் நேருவிற்கும் தொடர்பில்லை எனப் பரப்பும் வலதுசாரிகள்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

காங்கிரஸ் அடிவருடிகள், அர்பன் நக்ஸல்கள் பெருங்குரலெடுத்து இஸ்ரோவை ஆரம்பித்தவர் நேரு என்றும் விண்வெளியை கனவு கண்டவர் என்றும் கதற ஆரம்பித்து இருக்கிறார்கள். சிறிய உண்மை என்னவென்றால், நேரு மே 1964 இல் இறந்தார் மற்றும் ISRO ஆகஸ்ட் 1969 இல் நிறுவப்பட்டது.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ந்தியா கடந்த ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி நிலவில் விண்கலத்தை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடைய உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1964-இல் இறந்தார். ISRO நிறுவப்பட்ட ஆண்டு 1969. ஆனால் இஸ்ரோவின் தந்தை நேரு என்று காங்கிரஸ் கட்சியினர் தவறாகப் பரப்பி வருவதாகக் கூறி பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

Archive Link:

உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இதே செய்திகள் கடந்த 2019-இல் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது. மேலும் ஜூலை 2019-இல் சந்திரயான்-2 வெற்றிகரமாக ஏவப்பட்ட போதும் இதே செய்திகள் பரவி வந்துள்ளன.

Archive Link

மேலும் இது குறித்து இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, இதற்கு முன்பு டாக்டர் விக்ரம் சாராபாய் கற்பனை செய்தபடி 1962-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவாக (Indian National Committee for Space Research) INCOSPAR என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15, 1969 அன்று இஸ்ரோ உருவாக்கப்பட்டது. பின்னர் DOS (Department of Space) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ISRO 1972-இல் DOS-இன் கீழ் கொண்டு வரப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

எனவே INCOSPAR என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 1962 இல் INCOSPAR அமைப்பு உருவாக்கப்பட்ட போது ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பதையும், பின்பு அவரது மரணத்தைத் தொடர்ந்து 1964 மே முதல் அவரது பதவிக்காலம் முடிவடைந்துள்ளது என்பதும் தெளிவானது.

மேலும் 1962-இல் நேரு பிரதமராக இருந்த போது, இந்திய விண்வெளி திட்டம் தொடங்கப்படுவதற்கு அவர் காரணமாக இருந்ததால், அவரின் பிறந்தநாளான 2008 நவம்பர் 14 அன்று சந்திரயான்-1 விண்கலம் மூலம் நிலவில் இந்தியாவின் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டதாக ISRO தனது காலாண்டு இதழான Space India இதழின் 2008-ஆம் ஆண்டிற்கான அக்டோபர்-டிசம்பர் பதிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் Space இணையதளம் INCOSPAR குறித்து 2019 மார்ச் 02 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரோவின் அடித்தளமானது, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1962-இல் இயற்பியலாளரான விக்ரம் சாராபாயை விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழுவை (INCOSPAR) அமைக்க கூறியதன் மூலம், ​​இஸ்ரோவின் பயணம் நீண்டு கொண்டிருப்பதாகக் கூறுகிறது. மேலும் இந்த முயற்சியின் காரணமாகவே சாராபாய் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் தேசிய ஆய்வகங்கள் (National laboratories), தொழில்நுட்ப நிறுவனங்கள் (Institutes of technology) மற்றும் அணுசக்தி ஆணையங்கள் (Atomic Energy Commission) அமைப்பதை முன்னெடுத்த நேரு, AOC-யின் தலைவரான கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி ஹோமி பாபா மூலம், சாராபாயுடன் இணைந்து அவர் தனது அறிவியல் ஆய்வுகளை இந்தியாவில் முன்னெடுத்தார் என்பதையும் The Print வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

1963ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் அருகே தும்பாவில்(TERLS) இருந்து முதல் சவுண்டிங் ராக்கெட் ஏவப்பட்டது. இது இந்திய விண்வெளி திட்டத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக இஸ்ரோ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

இதன் மூலம் ISRO-வின் அடித்தளமான INCOSPAR என்ற அமைப்பு உருவாவதற்கு முக்கிய காரணமாக நேரு இருந்துள்ளார் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

மேலும் படிக்க: முஸ்லீம்களையும், இந்துக்களையும் பிரிக்கும் முடிவை நானே எடுத்தேன் என நேரு ஒப்புக்கொண்டதாகப் பரவும் தவறான தகவல் !

இதற்கு முன்பும், நேரு குறித்து பல செய்திக்கள் தவறாகப் பரவின. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: நேரு கையில் வாளியுடன் இருப்பதாகப் பரப்பப்படும் போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

முடிவு:

நம் தேடலில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, இதற்கு முன்பு 1962 இல் INCOSPAR என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளது என்பதையும், INCOSPAR உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பிரதமர் நேரு என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader