This article is from Jul 24, 2019

இஸ்ரோவில் இடஒதுக்கீடு இல்லையா ?

பரவிய செய்தி

திறமையின் அடிப்படையில் பணி கொடுத்ததால் இஸ்ரோ உலக அரங்கில் நம்பர் 1. இடஒதுக்கீடு உள்ளே போயிருந்தால் நாசமாய் போயிருக்கும் அரசு அலுவலங்கள் போல.

மதிப்பீடு

விளக்கம்

ந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை 22-ம் தேதி நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகளையும், அவர்களின் திறமையையும் பாராட்டி சமூக ஊடகங்களில் மீம்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தனர்.

அதில், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி துறையில் திறமையின் அடிப்படையில் பணி வழங்குவதாகவும், இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என மாவு பாக்கெட் 3.0 எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஆயிரக்கணக்கான லைக் மற்றும் ஷேர்களை பெற்று இருந்தது. இந்த பதிவுகளை பகிர்ந்து இடஒதுக்கீடு வேண்டாம் என்பது போன்ற வாசகங்களை எழுதி வந்தனர். ஆனால், இஸ்ரோ குறித்த தெளிவு அவர்களுக்கு தேவைப்படுகிறது.

உண்மை என்ன ?

Indian Space Research organization(ISRO)-வில் உள்ள பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில்லையா என்பது குறித்து ஆராய்ந்தோம். நேரடியாக இஸ்ரோ உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வேலைவாய்ப்பு குறித்த பிரிவில் இஸ்ரோ பணியிடங்களுக்காக அறிவிப்புகளை தேடி பார்த்தோம்.

உதாரணமாக, 2019 ஜூன் 15-ம் தேதி வெளியான டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பில் மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 4 இடங்களுக்கு பொது பிரிவினருக்கு 2, ஓபிசி-க்கு 2 என பிரிக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

2017-ல் Assistants and Upper division clerks பணியிடங்களுக்கு வெளியான அறிவிப்பில் மண்டல வாரியாக இஸ்ரோ மையம்/யூனிட்ஸ்-களில் இருக்கும் இடஒதுக்கீடு அடிப்படையிலான இடங்களை படத்தில் காணலாம். இஸ்ரோ பணியிடங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பொது பிரிவு, ஓபிசி, எஸ்சி,எஸ்டி மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கும் இடஒதுக்கீட்டின் இடங்கள் இருக்கின்றன.

இஸ்ரோவில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் போன்ற பணிகளுக்கு மட்டுமல்லாமல் விஞ்ஞானி மற்றும் பொறியாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கும் இடஒதுக்கீடு இருக்கிறது. 2018-ல் RECRUITMENT OF SCIENTIST / ENGINEER `SC’ பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் எந்தெந்த பிரிவினருக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்டவையும் இடம்பெற்று உள்ளதை காணலாம்.

இஸ்ரோவில் அரசு பள்ளி மாணவர்கள் :

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் திரு. கே.சிவன் தன்னுடைய ஆரம்பகால கல்வியை தமிழ் மொழியில் அரசு பள்ளியில் பயின்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயி உடைய மகனாக பிறந்த சிவன் அவர்கள் 1982-ம் ஆண்டில் இருந்து இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்பாக இஸ்ரோவின் தலைவராக இருந்த திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர். அவர் தன்னுடைய பேட்டிகளில் தாய்மொழி வழியிலான கல்விக் குறித்து பேசியுள்ளார்.

அதில், ” ஆங்கில விஞ்ஞானிகளை தவிர்த்து, பல்கேரியன், ஜாப்பனீஸ், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் பல சர்வதேச விஞ்ஞானிகள் தங்களின் தாய்மொழியிலேயே பயின்றுள்ளனர். நான் எனது தாய் மொழியான தமிழில் பயின்றேன். எங்கள் அனைவரின் அனுபவத்தில் இருந்து கூறுவது என்னவென்றால், தாய்மொழி வழியிலான கல்வி அவர்களுக்கு அறிவியலில் சுதந்திரமான சிந்தனைகளை ஊக்குவிக்கும் ” என 2014-ல் தெரிவித்து இருக்கிறார்.

இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ-வில் பல ஆண்டுகளாக தன்னுடைய சிறப்பான பணியை ஆற்றிய திரு.ஏ.பி.ஜே அப்துல்காலம் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர் ஆவார் என்பதை பலரும் அறிந்து இருப்போம். ஆக, தமிழ் வழியில் பயின்றவர்கள், அரசு பள்ளியில் பயின்றவர்கள் அறிவில் குறைந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற தவறான சிந்தனை அகற்றப்பட வேண்டும். அதேபோன்று, இடஒதுக்கீட்டில் வருபவர்கள் திறமையற்றவர்கள் என்ற சிந்தனையும் மாற வேண்டும்.

இவ்வாறு தவறான செய்திகளை பதிவிடுபவர்கள், இடஒதுக்கீட்டில் வருபவர்கள் திறமையற்றவர்கள் என்கிற தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், இஸ்ரோவிலும் இடஒதுக்கீடு முறையில் பணியாற்றுபவர்கள் ஏராளம் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்ரோவில் இடஒதுக்கீட்டு முறையே இல்லை எனக் கூறுவது முற்றிலும் தவறான தகவல் என கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் புரிந்து இருப்பீர்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader