பிரதமர் மோடி இத்தாலியப் பிரதமருக்கு கை கொடுக்கும்போது அவமதிக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி
இந்தியா வந்த இத்தாலி பிரதமரை ஜியோர்ஜியோ மெலோனியை இந்தியப் பிரதமர் மோடி வரவேற்ற போது, வணக்கம். நமஸ்தே. no hands!
மதிப்பீடு
விளக்கம்
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக 2023 மார்ச் மாதம் 2ம் தேதி இந்தியா வந்தார். அவரது வருகையையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
New meme template for “Gazab beizzati hai yaar”.😂 pic.twitter.com/HnYqnWhWdD
— Shantanu (@shaandelhite) March 4, 2023
இத்தாலியப் பிரதமரை இந்தியப் பிரதமர் மோடி வரவேற்கும் போது கை கொடுத்தார். ஆனால், ஜியார்ஜியா மெலோனி பதிலுக்கு கை கொடுக்காமல் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது என இப்புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படம் குறித்து வீடியோ ஏதேனும் பதிவிடப்பட்டுள்ளதா என இணையத்தில் தேடினோம். ‘டிடி நியூஸ் லைவ்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் மார்ச் 2ம் தேதி இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வருகை குறித்து 2 நிமிட 15 வினாடி வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்டிரபதி பவனிற்கு வரவேற்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், 13வது வினாடியில் இத்தாலி பிரதமர் தனது வாகனத்திலிருந்து இறங்கியதும் இந்தியப் பிரதமருக்கு கை கொடுக்கிறார். பிறகு அவருக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்து மேற்கொண்டு தேடியதில், ‘நரேந்திர மோடி‘ என்ற யூடியூப் பக்கத்திலும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. சுமார் 8 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் இத்தாலி பிரதமருக்கு இந்திய அமைச்சர்களை மோடி அறிமுகம் செய்து வைக்கிறார். பிறகு இந்தியப் பிரதமருக்கு இத்தாலியிலிருந்து வருகைதந்துள்ள அமைச்சர் மற்றும் பிரதிநிதிகளை ஜியார்ஜியா மெலோனி அறிமுகம் செய்து வைக்கிறார்.
அந்த வீடியோவில் 7வது நிமிடத்தில் இரண்டு நாட்டுப் பிரதமர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, கை குலுக்கிக் கொள்கிறார்கள். அதனைத் தொடர்ந்து இத்தாலி பிரதமர் தனது வாகனத்தில் ஏறுவதற்கு அங்கிருந்து புறப்படுகிறார்.
வாகனத்தில் ஏறுவதற்கு முன்பாக ஜியார்ஜியா மெலோனி மோடிக்கு வணக்கம் தெரிவிக்கும் போது, மோடி கை கொடுப்பதற்கு ஏதுவாக கைகளை நீட்டுகிறார். அப்போது அவரும் பதிலுக்குக் கைகொடுத்துள்ளதை வீடியோவில் காண முடிகிறது. இந்த நிகழ்விலிருந்து ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்து தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: கேமராவை மறைத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளி விட்டாரா ?
முன்னதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேமராவை மறைத்ததினால், மோடி அவரை தள்ளி விட்டதாகப் பரவிய வீடியோ குறித்த உண்மைத் தன்மையை யூடர்ன் செய்தியாக வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு இந்தியப் பிரதமர் மோடி கை கொடுக்கும்போது வணக்கம் வைத்து கை கொடுக்காமல் அவமதிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது. மோடிக்கு இத்தாலியப் பிரதமரும் கை கொடுத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.