இத்தாலியில் உள்ள தேவாலயத்தில் விநோதப் பறவை தென்பட்டதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நோவல் கொரோனா வைரசால் அதிக மக்களை இழந்த நாடான இத்தாலியில் உள்ள தேவாலயத்தில் விநோதமானப் பறவை ஒன்று தென்பட்டதாக கூறும் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயிரக்கணக்கில் பகிர்ந்து வரும் வீடியோவின் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. ஆகையால், வைரலாகும் வீடியோ குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
அரக்கன் உடல், நீளமான இறக்கைகள் என திரில்லர் திரைப்படங்களில் இடம்பெறும் பயங்கரமான பறக்கும் பறவையை போன்ற உருவமே வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது. வீடியோவில் வலப்புற ஓரத்தில் “JJPD Production ” என இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடுகையில், JJPD Production பெயரில் இருக்கும் யூடியூப் சேனல் வீடியோக்கள் கிடைத்தன.
தற்போது வைரலாகவும் வீடியோ காட்சி அடங்கிய முழு வீடியோவும் JJPD Production சேனலில் இடம்பெற்று இருக்கிறது. இவர்கள் பொது இடங்களில் அரக்கர்கள் இருப்பது போன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள்.
2019 ஜூன் 2-ம் தேதி ” Demon Terrifies in Granada City – Nicaragua 2019 – Gargola? ” எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் ஒரு நிமிடத்திற்கு காட்சிகளை கட் செய்து சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி உள்ளனர். வீடியோ தலைப்பில் கூறப்பட்டுள்ள கிரனடா நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது.
இதேபோல் 2019 செப்டம்பர் 8-ம் தேதி ” Demonic Gargoyle caught on camera – How it was created !!! 2019 ” எனும் தலைப்பில் முந்தைய வீடியோவில் இருக்கும் அரக்கனை எப்படி உருவாக்கினார்கள் என்பதையும் விளக்கி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.
2019-ல் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தேவாலயத்தின் மீது பறக்கும் அரக்கன் இருப்பது போன்று உருவாக்கப்பட்ட வீடியோவை இத்தாலி நாட்டில் உள்ள தேவாலயத்தில் விநோதப் பறவை தென்பட்டதாக தவறாக பரப்பி வருகின்றனர்.