இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் பிணக் குவியலா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
இத்தாலியின் நிலைமை.. தயவு செய்து வீட்டில் இருங்கள்.. உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
இத்தாலி நாட்டில் கோவிட்-19 வைரசால் (கொரோனா வைரஸ்) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இந்நிலையில், வைரசால் உயிரிழந்தவர்களின் உடல்களை குப்பையை கொட்டுவது போன்று கொட்டும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப், முகநூல், டிக் டாக் போன்றவற்றில் வேகமாய் பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள நிலைமையை பார்த்தாவது மக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும் என்று இவ்வீடியோ பரப்பப்படுகிறது.
மற்றொரு வாட்ஸ் அப் வீடியோவில், பெரிய வளாகத்தில் பிணங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருப்பது, ரிப்போர்ட் ஒருவர் வைரஸ் குறித்து பேசுவது மற்றும் இறந்தவர்களின் உடல்கள் குப்பை போல் கொட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோவின் காட்சிகள் மற்றும் டிக்டாக் வீடியோவாக பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவின் காட்சிகள் ” pandemic ” என்ற தலைப்பில் அறிவியல் சார்ந்து கற்பனையாக உருவாக்கப்பட்ட மினிசீரிஸில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளே. 2020 பிப்ரவரி 14-ம் தேதி Movie central எனும் யூடியூப் சேனலில் ” Pandemic | Coronavirus Movie | PART 2 ” என அப்படம் வெளியாகி இருக்கிறது.
2007-ல் வெளியான ” pandemic ” எனும் மினிசீரிஸ் படத்தின் 1.01.53 முதல் 1.02.22 வரையிலான நேரத்தில் இடம்பெறும் காட்சியை மட்டும் எடுத்து கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்கள் என பரப்பி வருகின்றனர். இந்த படத்தினை கொரோனா வைரஸ் பெயருடன் குறிப்பிட்டு வெளியிட்ட காரணத்தினால் கூட தவறான செய்திகள் பரவ வழிவகுத்து இருக்கும்.
” pandemic ” ஆனது லாஸ் ஏஞ்லெஸ் பகுதியில் மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவும் பயங்கரமான வைரஸை எஃப்பிஐ ஏஜென்ட் மற்றும் மருத்துவர்கள் தடுக்க முயற்சிப்பது போன்று அறிவியல் சார்ந்து கற்பனையுடன் உருவாக்கப்பட்ட சீரிஸ்.
மேலும் படிக்க : இத்தாலியில் உள்ள தேவாலயத்தில் விநோதப் பறவை தென்பட்டதா ?
இத்தாலி நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பல வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் இத்தாலி நாட்டைச் சுற்றியே பரப்பப்படுகிறது. தற்போது இருக்கும் சூழலில் தவறான செய்திகளால் மக்களுக்கு இருக்கும் அச்சம் கூடும் என்பதை நினைவில் வைத்து சரியான தகவல்களை மட்டும் பகிரவும்