இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையா?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
இத்தாலி நாட்டில் தற்போதைய நிலை இதுதான்.இந்த நிலை இந்தியா தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மக்கள் நாட்டின் சேவையாக நினைத்து வீட்டிலேயே இருக்கவேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
நோவல் கொரோனா வைரசால் அதிக மக்களை இழந்த நாடாக இத்தாலி இருந்து வருகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாமல் உயிர்களை இழந்து வரும் இத்தாலி தேசத்தின் நிலை இந்தியாவிற்கு வர வேண்டாம் என்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,” இத்தாலி நாட்டில் தற்போதைய நிலை இதுதான். இந்த நிலை இந்தியா தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மக்கள் நாட்டின் சேவையாக நினைத்து வீட்டிலேயே இருக்கவேண்டும் ” என்ற வாசகத்துடன் மேற்காணும் வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில், விமான ஓடுதளத்தில் மக்கள் மூச்சு விட சிரமப்படுவது, கீழே விழுந்து புரள்வது, பேருந்தில் இருந்து வெளியே வரும் மக்கள் தரையில் மயங்கி விழுவது, கத்திக் கொண்டு ஓடுவதாக போன்றவை பதிவாகி இருக்கிறது. அவர்களை சுற்றி உடல் கவசங்களை அணிந்து இருக்கும் நபர்களையும் பார்க்க முடிந்தது.
முதலில் வீடியோவின் தொடக்கத்தில் இடம்பெற்று இருக்கும் விமானத்தில் ” Senegal ” என இடம்பெற்று இருக்கிறது. செனெகல் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடாகும். அந்நாட்டின் விமானமும், ஆப்பிரிக்க மக்களும் இருக்கும் வீடியோவை இத்தாலி எனக் கூறி இருக்கிறார்கள்.
அடுத்ததாக, இந்த வீடியோ எதற்காக எடுக்கப்பட்டது எனத் தேடுகையில், 2019 நவம்பர் 29-ம் தேதி Dakaractu TV என்ற சேனலில் ” செனெகலின் Blaise Diagne சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற அவசரநிலை பயிற்சி ” என வைரலாகும் வீடியோவின் முழு முழுமையான காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
2019 நவம்பரில் செனெகல் நாட்டின் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அவசரநிலை பயிற்சி வீடியோவை இத்தாலி நாட்டின் விமான பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும், இத்தாலியில் இருந்து எத்தியோப்பியா சென்ற விமானத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என இதே வீடியோ பிற மொழிகளிலும் பரவி வருகிறது
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியது போன்று இந்தியாவிலும் பரவிடக் கூடாது என்பதற்காக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவது தவறில்லை. ஆனால், தவறான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவது ஏற்புடையது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.