இத்தாலியில் வீடுகளில் முடங்கியவர்கள் இஞ்சி இடுப்பழகி பாடலை பாடினார்களா ?

பரவிய செய்தி
இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கிய மக்கள் மன அழுத்தத்தை போக்க தங்கள் வீட்டு மாடியில் இருந்த படி இஞ்சி இடுப்பழகி பாடலை பாடிய தருணம்.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ்(கோவிட்-19) தாக்குதலில் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று இத்தாலி. இதுவரை இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,136-ஐ தாண்டியது. நோவல் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்த காரணத்தினால் இத்தாலியர்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளில் முடங்கிய இத்தாலியர்கள் மன உளைச்சலை போக்க தங்களின் வீட்டின் மாடியில் இருந்து தேவர் மகன் படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ” இஞ்சி இடுப்பழகி ” பாடலை பாடுவதாக வீடியோ என சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இறுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ தந்தி டிவி, மாலைமலர், தினமலர் உள்ளிட்ட தமிழ் செய்தி ஊடகங்கள் வரை வெளியாகியது. எனினும், இந்த வீடியோ போலியானது என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருவதாகவும், இருந்தாலும் இத்தாலியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளதாக கூறுவதாகவும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோவின் தெளிவின்மை, முரண்பட்ட தகவல்கள் உடன் வெளியாகி இருப்பதால் வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகத்தில் வெளியான வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் மார்ச் 17-ம் செய்தி நியூஸ்18 ஆங்கில செய்தியில் அதே வீடியோவை பயன்படுத்தி பாலிவூட் பாடலை இத்தாலியர்கள் பால்கனியில் பாடியதாக பரவிய செய்தி குறித்து விரிவாக வெளியிட்டு இருந்தனர்.
ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்படும் இத்தாலிய வீடியோ பல மொழிகளுக்கு ஏற்றார் போல் பாடல்களை மாற்றி மாற்றி வைரல் செய்யப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது. மேலும், மார்ச் 13-ம் தேதி lenardo carella என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான இத்தாலியர்கள் வீடியோவில் தமிழ் அல்லது பாலிவூட் பாடல்கள் ஏதும் இடம்பெறவில்லை.
Italians in lockdown all over Italy are keeping each other company by singing, dancing and playing music from the balconies. A thread to celebrate the resilience of ordinary people. This is Salerno: pic.twitter.com/3aOchqdEpn
— Leonardo Carella (@leonardocarella) March 13, 2020
This is Turin pic.twitter.com/fdVJ5PZAr6
— Leonardo Carella (@leonardocarella) March 13, 2020
மார்ச் 13-ம் தேதி lenardo carella தன் ட்விட்டரில் இத்தாலியர்கள் தங்கள் வீட்டின் பால்கனியில் பாடல்கள் பாடும் பல வீடியோக்களை பதிவிட்டு உள்ளார். இத்தாலி மக்கள் நம்பிக்கையூட்டும் விதத்திலும், மருத்துவர்களின் சேவைகளை பாராட்டும் விதத்திலும் வீடுகளில் பாடல்களை பாடி வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரசால் அடுக்குமாடி வீடுகளில் முடங்கி இருக்கும் இத்தாலிய மக்கள் பால்கனியில் இருந்து பாடல்கள் பாடிய உண்மையான வீடியோவை எடுத்து தமிழில் இளையராஜா பாடலையும் மற்றும் இந்தி பாடலையும் பாடியுள்ளதாக தவறாக வைரல் செய்து உள்ளனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.