இத்தாலி நாட்டின் மக்கள் பணத்தினை வீதிகளில் வீசி சென்றார்களா ?

பரவிய செய்தி
இத்தாலியில் உள்ள மக்கள் தங்கள் பணத்தை முழுவதுமாக சாலைகளில் வீசி எறிந்தனர், இந்த பணம் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற பயனற்றது என்று. நீங்கள் நன்றாக இருந்தால், மனிதகுலத்திற்காக ஏழைகளின் சேவை மற்றும் உதவிக்காக இதைச் செலவிடுங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கோவிட்-19 தொற்றால் அதிக உயிர்களை இழந்த நாடாக இத்தாலி தொடர்ந்து இருந்து வருகிறது. இதுவரை இத்தாலியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்தான், இத்தாலி நாட்டினை மையப்படுத்தி பல வதந்திகள், தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. எவ்வளவு பணம் இருந்தாலும் மக்களின் உயிரை காப்பற்ற முடியவில்லை என இத்தாலி நாட்டு மக்கள் வீதிகளில் பணத்தினை வீசிச் சென்றதாக மேற்காணும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
இத்தாலி மக்கள் சாலைகளில் பணத்தினை வீசிச் சென்றதாக வைரலாகும் புகைப்படம் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவை அல்ல, மேலும் அவை சமீபத்திய நிகழ்வும் அல்ல. வீதிகளில் இருப்பது வெனிசுலா நாட்டின் பொலிவர் பணம்.
2017-ம் ஆண்டில் இருந்து வெனிசுலா நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது, எண்ணெய் விலை சரிவு, அமெரிக்காவின் பொருளாதார தடைகள், கள்ளப் பணம் உள்ளிட்ட பிரச்சனைகள் அந்நாட்டின் நிலையை மாற்றின.
வெனிசுலா நாட்டில் புழக்கத்தில் இருந்த பொலிவர் பணத்தை புதிதாக அச்சிட்டு வெளியிடும் முயற்சியை அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்தார். எனினும், பணத்தின் மதிப்பில் மாற்றமில்லை என்ற காரணத்தினால் மக்கள் மதிப்பில்லா பணத்தினை வீதிகளில் வீசி உள்ளனர். அன்றாட தேவைக்கு பண்டமாற்று முறைக்கு மக்கள் மாறத் துவங்கினர்.
மதிப்பில்லாத பணத்தினை வைத்து அலங்கார பொருட்கள் செய்து விற்பனையின் செய்து உள்ளார்கள் அந்நாட்டு மக்கள். 2019 ஏப்ரல் மாதத்தில் வெனிசுலா நாட்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : வெனிசுலா நாட்டின் வீதிகளில் சிதறிக்கிடக்கும் அந்நாட்டு பணம் !
வெனிசுலா நாட்டில் நிகழ்ந்த சம்பவத்தினை இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் தவறாக இணைத்து இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் பிணக் குவியலா ?| உண்மை என்ன ?
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.