ஜாக்கிசான் தனது மகளுக்கு அவரது வாழ்க்கை சம்பவங்களை காட்டுவதாக தவறாகப் பரவும் திரைப்படத்தின் காட்சி !

பரவிய செய்தி
ஜாக்கிஜான் தனது மகளுக்கு யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ற காட்சியை காண்பித்த நெகிழ்வான தருணம். நண்பர்களே நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று வளர்க்கின்றீர்கள் ஆனால் நீங்கள் பட்ட காயத்தை,கஷ்டத்தை அவர்களுக்கு கற்பிக்க மறுக்கிறீர்கள் ?Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
நடிகர், சண்டை இயக்குநர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமைகள் கொண்டவர் ஜாக்கி சான். இவர் தனது மகளுக்கு, தான் வாழ்க்கையில் இதுவரை கடந்து வந்த பாதைகளை காண்பித்த நெகிழ்வான தருணம் இது என்று கூறி ஜாக்கிசானும் ஒரு பெண்ணும் இடம்பெற்றிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஜாக்கிஜான் தனது மகளுக்கு யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ற காட்சியை காண்பித்த நெகிழ்வான தருணம் நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தைகள் படக்கூடாது என வளர்க்கின்றீர்கள் நீங்கள் அடிப்படையில் சொல்லிக் கொடுக்கும் போது நாளை சமுதாயத்தில் நல்ல குழந்தைகளாக அவர்களும் உருவாவார்கள் நன்றி pic.twitter.com/IyyOeqqEq2
— அங்குசம் (@saiko58791481) June 30, 2023
அருமையான காணொளி நன்றி https://t.co/zZI4wJATox
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) June 30, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவில் இருப்பவர் ஜாக்கிசானின் உண்மையான மகள் அல்ல. இவை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் வீடியோ காட்சிகள் என்பதை கீழே உள்ள அவருடைய மகளின் (Etta Ng Chok-lam) புகைப்படத்தினை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம் அறிய முடிகிறது.
மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், ஜாக்கிசான் நடித்து கடந்த ஏப்ரல் 07 அன்று வெளிவந்த திரைப்படமான ரைடு ஆன் (Ride on) படத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் இடம்பெற்றிருப்பதை உறுதிபடுத்த முடிந்தது.
இத்திரைப்படத்தின் பாடலை Jackie Chan Germany என்னும் யூடியூப் சேனல் கடந்த ஏப்ரல் 07 அன்று தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகள் அனைத்தையும் கொண்ட வீடியோவை I mean என்னும் யூடியூப் சேனல் கடந்த ஜூன் 22 அன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்த காட்சிகள் ரைடு ஆன் (Ride on) திரைப்படத்தில் இடம்பெற்றவை என்று அந்த வீடியோவின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
மேலும் படிக்க: பணம் கிடைக்கும் என நினைத்து கமெண்ட் செய்யும் மக்கள்| ஜாக்கிசான் பெயரில் மோசடி !
இதற்கு முன்பும் ஜாக்கிசான் தொடர்பாக பரவிய செய்திகள் குறித்து ஆய்வு செய்து யூடர்ன் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறது.
மேலும் படிக்க: ஜாக்கிசானையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், ஜாக்கிஜான் தனது மகளுக்கு யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ற காட்சியை காண்பித்த நெகிழ்வான தருணம் எனப் பரவி வரும் வீடியோ காட்சி ஜாக்கிசான் நடித்து வெளிவந்துள்ள ரைடு ஆன் (Ride on) எனும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் என்பதையும், அதில் இருப்பது அவரின் மகள் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.