கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் குண்டு வெடிப்பே நிகழவில்லையா ?

பரவிய செய்தி
கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளை தவிர்த்து இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏதும் நிகழவில்லை- ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 406 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதாக 2017-ல் மத்திய அரசு லோக் சபாவில் அளித்த பதிலில் இடம்பெற்றுள்ளது. இதையறியாமல் ஜக்கி வாசுதேவ் தவறான தகவலை வெளிப்படையாக கூறியுள்ளார்.
விளக்கம்
கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில்செய்தியாளர்கள் சந்திப்பில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை பற்றி பேசியுள்ளார். அதில், இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் கடந்த 4 வருடங்களில் எங்கும் நிகழவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.
“ கடந்த 4 நான்கு வருடங்களில் நாட்டில் எந்தவொரு குண்டு வெடிப்பு சம்பவமும் நிகழவில்லை என்பதை அறிந்து கொண்டு பாராட்டி மகிழ வேண்டும். எதிர்பாராதவிதமாக காஷ்மீர் பகுதி மற்றும் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் மட்டுமே எதுவாக இருந்தாலும் நிகழ்கிறது ” என கூறியுள்ளார். இதனை நிகழ்த்தி காட்டிய பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
குண்டு வெடிப்பு சம்பவமே நிகழவில்லையா ?
ஜக்கி வாசுதேவ் நாட்டின் எல்லையோரப் பகுதியான காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறுவது தவறான தகவல்..!! நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன என்பதற்கு அரசின் பதில்கள் மற்றும் பத்திரிகை வெளியீடு என பல ஆதாரங்கள் உள்ளன.
2014-2018 ஆகிய 4 ஆண்டில் நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது, அதில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 406 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததே உச்சம். 2016-ல் உலகிலேயே அதிக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நாடு இந்தியா என செய்திகள் வெளியாகி உள்ளது.
” 2016-ல் நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி NBDC-யின் அறிக்கை என்ன என்று லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர் ஸ்ரீ ஹன்ஸ்ராஜ் கங்காராம் கூறிய பதிலில், “ 2016 ஆம் ஆண்டில் 406 (337 IED மற்றும் 69 Explosive ordnance) குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளதாக National bomb Data Centre-ன் அறிக்கை தெரிவிக்கிறது, இதில் 118 பேர் இறந்து உள்ளனர், 505 பேர் படுகாயமடைந்துள்ளனர் “ என தெரிவித்து உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ்ய சபாவில் 2018 மார்ச் 21-ம் தேதி அளித்த பதிலில், “ பீகார் மாநிலம் போத்கயா பகுதியில் 2018 ஜனவரி 19-ம் தேதி குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியை சுற்றி உள்ள இடங்களில் நடத்திய சோதனையில் இரண்டு IED குண்டுகள் எடுக்கப்பட்டு செயலிக்க செய்ததாக கூறியுள்ளனர் “.
2017 மார்ச் 7-ல் மத்தியபிரதேசத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜபாடி ரயில் நிலையத்திற்கு அருகில் போபால்-உஜ்ஜியன் ரயிலில் குண்டு வெடித்து 11 பேர் காயமடைந்தனர் என அரசு தரவுகள் தெரிவிக்கிறது.இந்தியாவில் முதல் ஐ.எஸ் தாக்குதல் இதுவே..!!
“ 2014 டிசம்பரில் பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் குண்டு வெடித்து ஒருவர் இறந்தார், மூன்று பேர் காயமடைந்தனர். “ 2014-ல் 190 IED வெடிப்பு சம்பவங்கள், 2015-ல் 268 IED வெடிப்பு சம்பவங்கள், 2016-ல் 337 IED வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதாகவும், 2015 ஆண்டை ஒப்பிடும் பொழுது 2016-ல் 26 சதவீதம் அதிகரித்து உள்ளதாக NBDC தரவுகள் தெரிவிக்கின்றன ”
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் எல்லையோரப் ராணுவ பகுதியில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த செய்திகளை ஜக்கி வாசுதேவ் அறியவில்லை.. கடந்த நான்கு ஆண்டில் என மோடியின் ஆட்சியை குறிப்பிட்டு இவ்வாறு தவறான தகவலை கூறியுள்ளார் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.