ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ராஜஸ்தான் கடைசி எனப் பொய் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர்.. கடைசி இடம் உ.பி !

பரவிய செய்தி

காங்கிரஸ் அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்த ஜல் ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்குவதில் பாஜக ஆளும் மாநிலங்கள் 100% இலக்கை முடித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் தனது மக்களுக்கு அநீதி இழைக்கிறார்- ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2024ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசால் ஜல் ஜீவன் திட்டம் கடந்த 2019ம் ஆண்டுக் கொண்டு வரப்பட்டது.

இதில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் கடைசி இடத்தில் இருப்பதாகப் பாஜக எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உண்மை என்ன ?

பாஜகவின் முன்னாள் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்(Rajyavardhan Singh Rathore) தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தது குறித்து இணையத்தில் தேடியபோது ஜல் ஜீவன் திட்டத்தின்(Jal Jeevan Mission) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கிராமப்புற வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புக் குறித்தான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Website Link

2022 நவம்பர் 9ம் தேதி நிலவரத்தின் படி, வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புத் திட்டத்தில் கடைசி இடத்தில் இருப்பது பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம். உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 20.18% வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, 2,64,29,055 வீடுகளில் 53,12,906 வீடுகளில் குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்திரப் பிரதேச மாநிலத்தில் குடிநீர் குழாய் இணைப்புத் திட்டத்தில் அயோத்தியா மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. அயோத்தியாவில் 7.16% கிராமப்புற வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது.

34 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்திரப் பிரதேச மாநிலம் 33வது இடத்தில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 28.61% வீடுகளில் குடிநீர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. 1,05,74,179 வீடுகளில் 30,25,546 வீடுகளில் குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது.

34 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ராஜஸ்தான் மாநிலம் 30வது இடத்தில் உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை விட ராஜஸ்தான் மாநிலம் நான்கு இடம் முன்பாக உள்ளது என நம்மால் அறிய முடிகிறது.

2022 நவம்பர் 9ம் தேதி நிலவரம் படி, கிராமப்புற குடிநீர் குழாய் இணைப்பில் குஜராத், தெலங்கானா, ஹரியானா, கோவா, பாண்டிச்சேரி உள்ளிட்டவை 100% நிறைவு செய்து உள்ளதாக ஜல் சக்தி மிஷன் திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 70,74,617 (56.61%) வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.

முடிவு :

நம் தேடலில், ஒன்றிய அரசின் குடிநீர் குழாய் இணைப்புத் திட்டத்தில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் கடைசி இடத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெளியிட்ட தகவல் தவறானது. ஜல் ஜீவன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள தகவலின்படி பாஜக ஆளும் உத்திரப் பிரதேச மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader