2016ல் தமிழ்நாடு காங்கிரஸ் ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என வாக்குறுதி அளித்ததாகப் பரவும் பொய் செய்தி !

பரவிய செய்தி
2016ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொண்டது. அதில் காங்கிரஸ் கட்சி ஜல்லிகட்டுக்கு தமிழகத்தில் முழுமையாக தடை விதிப்போம் என்று தங்களது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தனர். தமிழின துரோகிகள்: திமுக மற்றும் காங்கிரஸ்.
மதிப்பீடு
விளக்கம்
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று(மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்குத் தமிழ்நாட்டில் முழுமையாகத் தடை விதிப்போம் என வாக்குறுதி அளித்ததாக இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட்டினை பாஜக ஆதரவாளர் கிருஷ்ண குமார் முருகன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
கிருஷ்ண குமார் முருகன் பதிவிட்டிருந்த ஸ்கிரீன் ஷாட் எந்த ஊடகத்தில் வெளியானது என கீ வேர்ட் கொண்டு தேடினோம். அச்செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் 2016ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு மீதான தடையைக் காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு வேறு ஏதேனும் ஊடகத்தில் இது குறித்து செய்திகள் வெளிவந்துள்ளதா எனத் தேடினோம். ‘ஜீ நியூஸ்’ இணையதளத்திலும் இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளதாக ANI தெரிவித்துள்ளது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளைத் தவிர வேறு எந்த ஊடகத்திலும் (தமிழ் ஊடகங்கள் உட்பட) காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகவில்லை.
மேலும் இதுகுறித்துத் தேடியதில் 2021, ஜனவரி மாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட இரண்டு செய்திகளையும் பதிவிட்டு, காங்கிரஸ் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிப்பதாகத் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. அதில், “பொய் செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள் சூர்யா. எங்களது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மீதான தடையைத் திரும்பப் பெறுவோம் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளனர்.
Stop propagating false news Mr Suryah. Look at the point 55 of our manifesto. We have clearly mentioned that we will revoke the ban on Jallikattu. https://t.co/7ptZgqrnUF pic.twitter.com/auHEC28ARJ
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 12, 2021
மேலும் தங்களது தேர்தல் அறிக்கையின் 72வது பக்கத்தினை பதிவிட்டுள்ளனர். அதில், “பா.ஜ.க. அரசின் தவறான அணுகுமுறையால் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்தத் தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றுள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி 2016ம் ஆண்டு முதலில் வெளியிட்டதாகச் சொல்லப்படும் ஆவணப்படுத்தப்பட்ட (Archive) தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவோ, ஜல்லிக்கட்டுக்கு எதிராகவோ எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது கிடைக்கக்கூடிய தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறிவிப்பு உள்ளதைக் காண முடிகிறது.
மேற்கொண்டு தேடியதில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்ட 2016, ஏப்ரல் 27ம் தேதி வெளியான ‘இந்து தமிழ் திசை’ செய்தி கிடைத்தது. அதில், 55வது வாக்குறுதியாக “கிராமியக் கலை – ஜல்லிகட்டு” தொடர்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனைக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொருளடக்க பக்கத்திலும் காண முடிகிறது.
இவற்றிலிருந்து காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என வாக்குறுதி அளிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என வாக்குறுதி அளித்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
“ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்படும் எனக் காங்கிரஸ் 2016 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. ஆனால், 2017ல் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, பக்கம் எண்.72ல் கடைசி வாக்குறுதியைச் சேர்த்து, இணையதளத்தில் உள்ள தேர்தல் அறிக்கை கோப்பினை மாற்றினார்கள்” என பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா டிவிட்டரில் நமது கட்டுரைக்கு பதில் அளித்துள்ளார். மேலும், ‘இந்தியா டுடே’ செய்தி ஒன்றினையும் பதிவிட்டிருந்தார்.
Fake News by @youturn_in !
Congress indeed promised #Jallikattu Ban in their 2016 Manifesto.
After the protests in 2017 they changed the manifesto file in the website to add a last point in Page No.72.
Here’s @IndiaToday’s video news on that . pic.twitter.com/L0MhSlK1I2 https://t.co/0lvMO0M6QT
— SG Suryah (@SuryahSG) May 18, 2023
இதேபோல் கிருஷ்ணகுமார் முருகனும் தனது டிவிட்டர் பக்கத்தில், 2021ஆம் ஆண்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் வெளியான செய்தியிலும் காங்கிரசின் 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை முழுமையாகத் தடை செய்வோம் என்று தெரிவித்ததாக மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தி. இதை விட்டுட்டீங்க @Iyankarthikeyan.
2016ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக தடை விதிக்கப்படும் என்று தெரிவித்ததாக மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்.https://t.co/mC2clXUncP https://t.co/W5nzwuVoHH pic.twitter.com/IQDNFRUVpD
— Krishna Kumar Murugan (@ikkmurugan) May 18, 2023
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்ட 2016, ஏப்ரல் 27ம் தேதி ‘தி நியூஸ் மினிட்’ இணைய தளத்தில் வெளியான செய்தியில் அவ்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளனர். அதிலும் ‘Jallikattu to be legalized in the state’ என்றே கூறப்பட்டுள்ளது.
மேலும், 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்த போராட்டங்களுக்கு பிறகே காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மாற்றம் செய்து தங்களது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர் என எஸ்.ஜி.சூர்யா கூறுகிறார். இதே கருத்தினை 2017ம் ஆண்டும் பலர் கூறியுள்ளனர்.
For all those who speak without getting the facts or speak in self imposed blindness. This is the real manifesto of the CONGRESS in 2016. https://t.co/H44XIUxJN0
— KhushbuSundar (@khushsundar) January 19, 2017
அப்போதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் உறுப்பினராக இருந்த சி.ஆர்.கேசவன், 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புத்தகத்தின் புகைப்படத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குறிப்பு உள்ளது. இத்தகவலினை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு அவர்களும் டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். இவர்கள் இருவரும் தற்போது பாஜக உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னரே கூறியதை போலக் காங்கிரஸ் கட்சியின் ஆவணப்படுத்தப்பட்ட (Archive) தேர்தல் அறிக்கையாகக் கிடைக்கக்கூடிய கோப்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ எந்த வாக்குறுதியும் இல்லை. தற்போது காங்கிரஸ் இணையதளத்தில் உள்ள அறிக்கையில் ஜல்லிக்கட்டை நடத்தத் தீவிர முயற்சி மேற்கொள்வோம் என்று உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என அறிவித்ததாகக் கூறுபவர்கள், அவர்களது தேர்தல் அறிக்கையில் உள்ள ஆதாரத்தினை காண்பிக்கவில்லை. நம் தேடலில் அப்படி எந்த வாக்குறுதியும் அவர்கள் அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.