This article is from Apr 09, 2020

தப்லீக் ஜமாத் சென்றவர் மருத்துவமனையில் நிர்வாணமாக ஓடியதாக வைரலாகும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

18+ பதிவு. மருத்துவமனையை அலங்கரிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட மர்ம நபர்.

Facebook link | archive link

மதிப்பீடு

விளக்கம்

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் நாடு முழுவதும் பரவியது. இதற்கு முன்பே கொரோனா வைரசை பரப்புவது முஸ்லீம்களே என ஏராளமான வதந்திகள் பரவி இருந்தன.

இந்நிலையில், தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை வார்டில் நிர்வாணமாக ஓடுவதாக 2.14 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று இந்திய அளவில் வைரலாகி வருகிறது. ராஜேந்திர கிருஷ்ணசாமி என்பவரின் முகநூல் பக்கத்தில் பதவிடப்பட்ட வீடியோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

காஸியாபாத் மருத்துவமனையில் கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்கள் சுகாதார பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அரை நிர்வாணமாக சுற்றி வருவதாகவும் ஊழியர்களிடம் இருந்து புகார் கடிதம் அளிக்கப்பட்டது குறித்து இந்திய அளவில் செய்திகளில் வெளியாகி இருந்தன. ஆனால், அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகவில்லை.

வைரல் செய்யப்படும் வீடியோவின் தொடக்கத்தில் இருந்து அந்த நபர் சுற்றிக் கொண்டிருக்கும் பகுதி மருத்துவமனை போல் இல்லை. நிர்வாணமாக அங்குள்ள கண்ணாடிக் கதவுகளை தலையால் உடைத்துக் கொண்டிருக்கிறார். அப்பகுதியை காணுகையில் மசூதியைப் போன்று தோன்றுகிறது. மேலும், அந்த வீடியோவில் முஸ்லீம் நபர்கள் சிலரையும் காண முடிந்தது.

வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வைரல் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல மற்றும் பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாப் ட்ரெண்ட் எனும் யூடியூப் சேனலில் வெளியான 2.47 நிமிட வீடியோ உடன் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியின் குல்ஸான்-இ-ஹதீத் எனும் நகரத்தில் உள்ள மசூதியில் நிர்வாணமாக வந்த நபர் அப்பகுதியை சேதப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

Youtube link | archive link

நிர்வாணமாக வந்த நபர் சேதப்படுத்திய மசூதி பாகிஸ்தான் நாட்டின் குல்ஸான்-இ-ஹதீத் நகரில் உள்ள ஜாமியா காலித் பின் வாலித் மசூதியாகும். கூகுள் மேப் இல் இருந்து எடுக்கப்பட்ட மசூதியின் புகைப்படமும், பாகிஸ்தான் நாட்டில் வெளியான வீடியோவில் இருக்கும் கட்டிடமும் ஒன்றாக இருப்பதை காணலாம்.

தமிழில் வைரல் செய்யப்பட்ட வீடியோ ஆனது உண்மையான வீடியோவில் அந்நபர் கண்ணாடியை உடைக்கும் காட்சியில் இருந்தே கட் செய்து பரப்பி வருகிறார்கள். அதற்கு முன்பாக இருந்த காட்சிகள் பாகிஸ்தானில் வெளியான வீடியோவில் இருக்கிறது. இந்தியாவில் பிற மொழிகளில் இவ்வீடியோவில் இருந்து 20 நொடிகள் மட்டும் கொண்ட காட்சியே பரப்பப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தப்லீக் ஜமாத் சென்ற நோயாளிகள் குறித்து தவறான தகவல் பகிர்ந்த எம்பிக்கள்!

2019-ல் பாகிஸ்தான் நாட்டின் மசூதியில் நுழைந்து சேதப்படுத்திய நபரின் வீடியோவை வைத்து தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர் மருத்துவமனையில் நிர்வாணமாக ஓடுவதாக தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதை கிடைத்த ஆதாரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Please complete the required fields.




Back to top button
loader