1,172 முறை இரத்த தானம் செய்த ஜேம்ஸ் ஹாரிசன் பற்றி தெரியுமா ?

பரவிய செய்தி
ஜேம்ஸ் ஹாரிசன் என்ற 81 வயது முதியவர் தன் வாழ்நாள் முழுவதும் 1172 முறை ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பற்றி உள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் என்ற 81 வயது முதியவர் தன் வாழ்நாளில் 1,172 முறை இரத்ததானம் செய்து ” தங்க கைக் கொண்ட மனிதர் ” என அனைவராலும் அழைக்கப்படுகிறார். தன்னுடைய 18-வது வயதில் இரத்ததானம் கொடுக்க தொடங்கி 81 வயது வரையிலும் இரத்ததானம் அளித்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.
ஜேம்ஸ் ஹாரிசன் உடைய இரத்தம் தனித்துவமானது எனலாம்.ஏனெனில், அவரது இரத்தத்தில் அதிக அளவில் ஆன்டிபாடிகள் இருக்கின்றன. அவை குறிப்பாக ஆன்டி-டி இம்யூனோக்ளோபுலின் இன்ஜெக்சன் தயாரிப்பில் மதிப்புமிக்கவை.
ஜேம்ஸ் ஹாரிசன் இரத்தம் மூலம் உருவான ஆன்டி-டி இன்ஜெக்சன் கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு பயன்படக்கூடியது. ஜேம்ஸ் ஹாரிசன் உடைய மகளின் இரண்டாவது மகப்பேறுவில் கூட ஆன்டி-டி இன்ஜெக்சான் பயன்படுத்தி உள்ளனர்.
” தங்க கைக் கொண்ட மனிதர் ” என அழைக்கப்படும் ஜேம்ஸ் ஹாரிசன் 62 ஆண்டுகளாக 1172 முறை இரத்ததானம் செய்து உள்ளார். அதில், 1162 முறை வலது கரத்திலும், 10 முறை மட்டும் இடது கரத்திலும் இரத்ததானம் அளித்திருக்கிறார் என சிட்னி மார்னிங் ஹெரால்ட் அறிக்கை கூறுகிறது.
ஜேம்ஸ் ஹாரிசன் உடைய பிளாஸ்மா மூலம் நடைபெற்ற சிகிச்சையின் மூலம் 24 லட்சம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலியன் ரெட் கிராஸ் தெரிவித்து இருக்கிறது. இத்தகைய ஆன்டிபாடிகளை மொத்த ஆஸ்திரேலிய மக்களில் வெறும் 200 பேர் மட்டுமே உருவாக்குவதாக கூறப்படுகிறது.
60 ஆண்டுகளுக்கு மேலாக இரத்ததானம் அளித்து வந்த ஜேம்ஸ் ஹாரிசன் தன்னுடைய இறுதி இரத்ததானத்தை மே 2018-ல் அளித்து இருந்தார். இரத்த தானம் அளிப்பதற்கு 80 வயதே இறுதியாக இருக்கும் பட்சத்தில் ஜேம்ஸ் ஹாரிசன் தன் 81-வது வயதிலும் இரத்ததானம் அளித்து இருந்தார்.
ஜேம்ஸ் ஹாரிசன் 1000-க்கும் அதிகமாக முறை இரத்ததானம் அளித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்தது. எனினும், தன் சாதனையை பிறர் முறியடிக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாகும். ஏனெனில், ஒருவர் 1000 முறை இரத்ததானம் செய்ய வேண்டும் என ஜேம்ஸ் ஹாரிசன் நினைக்கிறார்.
வாழும் காலத்தில் ஆயிரம் முறை இரத்ததானம் அளித்து லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் பற்றி உலகம் அறிய வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.