ஜம்மு&காஷ்மீரில் அடிக்கல் நாட்டியும் எய்ம்ஸ் பணிகள் துவங்கவில்லையா ?

பரவிய செய்தி
ஜம்மு-காஷ்மீரில் 4 வருடத்திற்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நட்ட கல். நட்டது நட்ட மாதிரியே இன்றும் இருக்கிறது.
மதிப்பீடு
சுருக்கம்
எது உண்மை : ஜம்மு மற்றும் காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற செய்தி 4 வருடத்திற்கு முன்பே வெளியாகி அதற்கான இடமும் தேர்ந்தெடுத்து அறிவிப்பு பலகையை வைத்து உள்ளனர்.
ஆனால், அப்பகுதியில் வசித்து வரும் நாடோடி இன மக்கள் வேறு இடத்திற்கு செல்ல மறுத்தது, மாநிலத்தில் ஆட்சிக் கலைந்தது உள்ளிட்ட காரணங்களால் தற்போது தான் அதற்கான பணிகள் துவங்க உள்ளன. பிப்ரவரி 3-ம் தேதி அடிக்கல் நாட்ட பிரதமர் செல்கிறார்.
எது பொய் : ஜம்மு, காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நான்கு வருடத்திற்கு முன்பே அடிக்கல் நாட்டியதாகக் கூறுவது.
விளக்கம்
இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சியில் அமைய இருக்கும் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2 எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் விஜய்பூர் பகுதியும்¸ காஷ்மீர் பள்ளத்தாக்கின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வாகின. இதில், ஆச்சரியம் என்னவெனில் முழுமையான நிதி ஒதுக்கீடு அறிவிக்காத நிலையிலும் ஜம்மு மற்றும் காஷ்மீர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.90 கோடியை அரசு வழங்கி இருந்தது.
எனினும், 2015-ல் அனுமதி அளிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் எய்ம்ஸ் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை, அடிக்கல் நாட்டியது நட்டதாகவே இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாகியும் பணிகள் துவங்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் ஜம்முவில் எய்ம்ஸ்க்கு தேர்வாகிய பகுதியில் இருந்து நாடோடி இன மக்களின் 215 குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற முடியாமல் இருந்தது. அங்கு வசித்த மக்களும் வேறு பகுதிகளுக்கு செல்ல தொடர்ந்து மறுத்து வந்தனர்.
அதன்பின், சென்ற வருடம் ஜம்மு & காஷ்மீரில் ஆட்சிக் கலைந்தக் காரணத்தினால் ஆளுநர் ஆட்சி நடைபெற்று பின் குடியரசுத்தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
சென்ற வருடம் ஜம்முவில் எய்ம்ஸ் அமையவிருந்த பகுதியில் வசித்து வந்த நாடோடி இன மக்களுக்கு மறு குடியேற்றம் ஏற்படுத்தி தந்த பிறகு எய்ம்ஸ் பணிகள் துவங்கியுள்ளன.
ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 1,954 ஏக்கர் பரப்பளவு கண்டறியப்பட்டு அப்பகுதியைச் சுற்றி எல்லை சுவருக்கான அடிக்கலை சம்பாவின் துணை ஆணையர் ஆர்.எஸ்.தாரா ஜூன் 2018-ல் நாட்டினார்.
இந்திய அரசின் பிரதான் மந்த்ரி ஸ்வஸ்த்ய சுரக்சா யோஜனாவின் கீழ் ரூ.4000 கோடி மதிப்பிலான 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு பிப்ரவரி 3-ம் தேதி பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். மேலும், சில திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு :
2015-ல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் எய்ம்ஸ் அமைய அனுமதி அளிக்கப்பட்டாலும் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் இருந்த சிக்கலை பாஜக கூட்டணியில் இருந்த மாநில அரசு நீக்கி நிலத்தை வழங்க ஏற்படுத்திய காலத்தாமதமே பணிகள் துவங்காமல் இருந்ததற்கு காரணம்.