சீன விரைவுச் சாலையை ஜம்மு தேசிய நெடுஞ்சாலை 44 எனத் தவறாகப் பரப்பிய வலதுசாரி ஆதரவாளர்கள் !

பரவிய செய்தி
தேசிய நெடுஞ்சாலை 44, வடக்கு பகுதி ஜம்மு. பாரதம், 70 ஆண்டுகளாக சரியான சாலைகள் அமைக்கப்படாத நாட்டில் இன்று மாஸ்டர் பீஸ்/உலக தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
மதிப்பீடு
விளக்கம்
மலைகளுக்கு இடையில், நீரோடையின் மீதுள்ள நெடுஞ்சாலை ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அந்த சாலை இந்தியாவில் உள்ள காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை 44 என்றும், 70 ஆண்டுகளில் இந்தியாவில் அமைக்கப்படாத அளவிற்கு இன்று உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அப்பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
जम्मू नेशनल हाईवे 44 👌
भारत का विपक्ष अंधा बहरा है, इसलिए दहाड़ मारता आंखे चौंधियाता विकास दिखता नही है उनको। pic.twitter.com/B0d7Phg55A— Vikas Office (@VikasSOffice) June 26, 2023
உண்மை என்ன ?
ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எனப் பரப்பப்படும் புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் அது சீனாவில் உள்ள நெடுஞ்சாலை என அறிய முடிந்தது. ‘Caixin Global’ என்னும் தளத்தில் பரவக் கூடிய நெடுஞ்சாலை படத்துடன் புகைப்படத் தொகுப்பு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதன் தலைப்பில் “நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான பெரிய திட்டங்களைச் சீனா கொண்டுள்ளது” என்றுள்ளது. மேலும் பரவக் கூடிய படத்திற்குக் கீழே ‘வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள Weiyuan-Wudu விரைவுச்சாலை 2020ல் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா 2035ம் ஆண்டுக்குள் சுமார் 4,61,000 கிலோமீட்டர் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மூலம் அமைக்கப்பட்ட இந்த கட்டுமானமானது நேர்த்தியான சாலை அமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாலை பாதுகாப்பானது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2021ம் ஆண்டு நிலவரப்படி, சீனாவானது சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக முதலீடு செய்துள்ளது. சுமார் 1,17,000 கிலோமீட்டர் தொலைவிற்குத் தேசிய நெடுஞ்சாலையை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
சீனாவின் கன்சு (Gansu) பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் இணையதளத்திலும் இச்சாலை குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. பரவக் கூடிய சாலையை வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட படத்துடன் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ள செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்தோம்.
2020, ஜனவரி 1ம் தேதி வெளியான அந்த செய்தியில், Wiwu விரைவுச்சாலை சோதனை நடவடிக்கைக்காகத் திறக்கப்பட்டது என்றுள்ளது. இவற்றிலிருந்து ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலை 44 எனப் பரவும் சாலையின் படம் சீனாவில் உள்ள சாலை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : வைரலாகும் சீனாவின் ஷாங்காய் நண்பன் பாலத்தின் வீடியோ… உண்மை என்ன ?
இதற்கு முன்னர் இந்தியா எனப் பரப்பப்பட்ட சீன சாலைகள் தொடர்பான போலி செய்திகளின் உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : ஏரி தண்ணீரில் மூழ்கிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள்.. இந்தியா எனப் பரவும் சீனா வீடியோ.
முடிவு :
நம் தேடலில், ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை 44 என சமூக வலைத்தளங்களில் பரவும் படம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. அது சீனாவில் உள்ள விரைவுச்சாலை என்பதை அறிய முடிகிறது.