ஜப்பான் சாலையில் ஏற்பட்ட ராட்சத குழி 2 நாட்களிலேயே சீரமைக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த விபத்தில் ராட்சத குழி போல் பாதிப்படைந்த சாலைகள் இரண்டே நாட்களில் சரி செய்யப்பட்டு, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
மதிப்பீடு
சுருக்கம்
ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த விபத்தில் ராட்சத குழி போல் பாதிப்படைந்த சாலைகள் இரண்டே நாட்களில் சரி செய்யப்பட்டு, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
விளக்கம்
ஜப்பான் நாட்டில் உள்ள Fukuoka என்ற நகரத்தின் மையப்பகுதியில் உள்ள சாலையில் திடீரென மிகப்பெரிய ராட்சத குழி உருவாகியது. 2016 நவம்பரில் நிகழ்ந்த விபத்தில் சாலைக்கு அடியில் சென்ற குழாய்கள் அனைத்தும் பெருமளவில் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட சாலையை சரி செய்ய அந்நாட்டு அரசுக்கு 2 நாட்களே ஆகியது என்பது இணையத்தை ஆக்கிரமித்த தகவல்.
Fukuoka நகரத்தில் மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள JR Hakata ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள 5 வழிச் சாலையின் டிராபிக் சிக்னல் உள்ள இடத்தில் மிகப்பெரிய விபத்து நவம்பர் 8-ம் தேதி காலையில் நேர்ந்துள்ளது. இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் தண்ணீர் விநியோகம், மின்சாரம், எரிவாயு, போன் சிக்னல் உள்ளிட்டவை தடைப்பட்டாலும் யாருக்கும் பாதிப்பு நிகழவில்லை.
30 மீட்டர் அகலம், 15 மீட்டர் ஆழம் கொண்ட ராட்சத குழி 6,200 கன மீட்டர் அளவிற்கான மணல் மற்றும் சிமென்ட் கொண்ட கலவையால் நிரப்பப்பட்டது. அந்நகரின் பணியாட்களை கொண்டு 2 நாட்களிலேயே சாலையில் இருந்த ராட்சத குழியை சீரமைக்கும் பணியை மேற்கொண்டது என உள்ளூர் மீடியாவில் வெளியாகியது.
2 நாட்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற சீரமைப்பு பணியால் ராட்சத குழியில் பாதிப்படைந்த கழிவுநீர் குழாய், சாலை மற்றும் டிராபிக் லைட் உள்ளிட்டவை சரி செய்யப்பட்டன. எனினும், உடனடியாக Fukuoka நகரின் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளின் ஒப்புதல் அளித்து 6 நாட்களுக்கு பின்னர் நவம்பர் 15-ம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது.
2 நாட்களில் சரி செய்யப்பட்ட சாலையானது முன்பிருந்ததை விட 30 மடங்கு வலிமையானது என Fukuoka நகரின் மேயர் soichiro takashima பெருமைப்பட பேசி இருந்தார்.
மீண்டும் ராட்சத குழி :
Fukuoka நகரில் ஏற்பட்ட ராட்சத குழி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களில் நவம்பர் 26-ம் மீண்டும் பாதிப்புக்குள்ளாகியது.
மீண்டும் ராட்சத குழியை சீரமைக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று ஒரு வாரம் கழித்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஏற்கனவே ராட்சத குழியை சீரமைத்த இடத்தில் மீண்டும் பள்ளம் உண்டாகியதற்கு காரணம் அதற்கு அருகில் உள்ள பகுதியின் நிலத்திற்கு கீழே நடைபெற்ற கட்டுமானப் பணிகளே காரணம் என நகரத்தின் அதிகாரிகள் அறிவித்தனர்.
ஜப்பானில் ராட்சத குழியை 2 நாட்களில் சீரமைத்தனர் என்பது சரியான தகவலாக இருப்பினும் மீண்டும் ராட்சத குழி உண்டாகி 1 வாரத்திற்கு பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்பதையும் சிறிது நாட்களில் மீண்டும் பள்ளம் உண்டாகியது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம்.