ஜப்பான் தீவில் ஆயிரக்கணக்கில் காகங்கள் சூழ்ந்ததாக தவறான தகவலை பரப்பிய பாலிமர், தினத்தந்தி !

பரவிய செய்தி
ஜப்பானில் விசித்திர நிகழ்வு – தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்.. இயற்கை பேரழிவின் தொடக்கமா..?
மதிப்பீடு
விளக்கம்
துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு அந்நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கம் குறித்த பல்வேறு தவறான செய்திகள் உலாவ செய்தன. இதற்கிடையில், துருக்கி நிலநடுக்கத்திற்கு முன்பாக பறவைகள் விசித்திரமாக நடந்து கொண்டதாக தவறான வீடியோவும், உறுதிப்படுத்த முடியாத சில வீடியோக்களும் பரவின.
இந்நிலையில், ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் காகங்கள் கூடிய விசித்திர நிகழ்வு அரங்கேறி உள்ளதாகவும், இது இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா ? ” என தினத்தந்தி மற்றும் பாலிமர் செய்தி வெளியிட்டு இருந்தன. இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ஜப்பானில் ஒரே இடத்தில் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் – இயற்கை பேரழிவென அச்சம் (காணொளி)#Japanhttps://t.co/KDSF1AFBdA
— IBC Tamil (@ibctamilmedia) February 15, 2023
உண்மை என்ன ?
வீடுகள், வாகனங்கள், சாலை என காகங்கள் சூழ்ந்து காணப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2023 ஜனவரி 26ம் தேதி மெக்சிகோ நாட்டின் வீடுகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் சூழ்ந்ததாக ” Netnoticians எனும் இணையதளத்தில் வைரல் செய்யப்படும் வீடியோவின் படங்கள் இடம்பெற்று இருந்தது கிடைத்தது.
செய்திகளில் வெளியான வீடியோவின் காட்சிகளும், மெக்சிகோ என வெளியான செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தில் உள்ள காட்சிகளும் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது.
மேற்கொண்டு தேடுகையில், ஜனவரி 30ம் தேதி MSN எனும் இணையதளத்தில் அதே வீடியோவின் மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. அந்த வீடியோவில், ” அங்கு நிறுத்தப்பட்ட காரின் நம்பர் பிளேட்டில் Guanajuato CPJ-143-E ” என இடம்பெற்று இருக்கிறது.
Guanajuato CPJ நம்பர் பிளேட் குறித்து தேடுகையில், அந்த வாகன பதிவு எண் மெக்சிகோ நாட்டின் குவானாஜோடோ(Guanajuato) நகரத்தைச் சேர்ந்தது என அறிய முடிந்தது.
மேலும் படிக்க : துருக்கி நிலநடுக்கம்: பழைய, தொடர்பில்லாத படங்களை பதிவிட்ட தந்தி டிவி
இதற்கு முன்பாக, துருக்கி நிலநடுக்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள் பழைய மற்றும் தொடர்பில்லாத படங்களை தந்தி டிவி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், ஜப்பான் தீவில் ஆயிரக்கணக்கில் காகங்கள் சூழ்ந்த விசித்திர நிகழ்வு எனப் பரப்பப்படும் வீடியோ 2023 ஜனவரியில் மெக்சிகோவில் நிகழ்ந்த சம்பவம். துருக்கியில் பிப்ரவரி 6ம் தேதியே நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வைத்து தவறான செய்திகள் வெளியாகி உள்ளன என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.