தமிழருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஜப்பான் அரசு.

பரவிய செய்தி

ஜப்பான் நாட்டின் அஞ்சல் தலையில் தமிழரின் படத்தை வெளியிட்டு கௌரவித்தது ஜப்பான் அரசு.

மதிப்பீடு

சுருக்கம்

பல தமிழ் இலக்கிய நூல்களை ஜப்பான் மொழியில் மொழிப் பெயர்க்க உதவியதற்காக முத்து அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை ஜப்பான் அரசு வெளியிட்டு கௌரவித்துள்ளது.

விளக்கம்

சேலம் ஓமலூரைப் பூர்வீகமாகக் கொண்ட சொ.மு.முத்துவிற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஷுஜோ மாட்சுனகா என்பருக்கும் இடையே உருவான நட்புறவால் பல தமிழ் இலக்கிய நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளன.

Advertisement

உயரமாக மற்றும் சிகப்பான மனிதன் என்னை கண்டு கைகளை கூப்பி தலைவணங்கி “ வணக்கம் ” என்று அறிமுகமாகியதை நினைவுக்கூர்வதாக முத்து 2012-ல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஷுஜோ மாட்சுனகா ஆங்கில புலமைமிக்கவர். இவரும் முத்துவின் மகனான சேகரும் நீண்ட காலமாக “ பேனா நண்பர்கள் ”. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஷுஜோ கலந்துகொண்டு திருக்குறள் குறித்த ஆங்கில ஆய்வு கட்டுரையை வாசித்துள்ளார்.

ஷுஜோக்கு தமிழ் இலக்கிய நூல்களின் மீது அளவில்லா ஆர்வம் எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்காக ஜி.யூ.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் அனுப்பப்பட்டுள்ளது. 1980-ம் ஆண்டில் ஷுஜோ திருக்குறளை ஜப்பான் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார்.

ஷுஜோ மற்றும் முத்துவிற்கு இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு நீடித்துள்ளது. இந்தியா வந்த ஷுஜோவிடம் பாரதியார் பாடல்கள் பற்றி எடுத்துரைத்துள்ளார் முத்து. இதன் விளைவாக பாரதியாரின் “ குயில் பாட்டு ” ஜப்பான் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. இத்தகைய மொழிப்பெயர்ப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விருதினையும், பரிசுத் தொகையையும் பெற்றது. 

நீண்ட நாட்களாக இருவருக்கும் இடையே கடித வழியில் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதையடுத்து, மணிமேகலை, நாலடியார், பஞ்சதந்திரக் கதைகள், வள்ளலாரின் குரல் ( voice of vallalar ) ஆகியவற்றின் ஆங்கில நூல்களின் உதவிக் கொண்டு ஷுஜோ ஜப்பான் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். ஜப்பான் நாட்டில் உள்ள ஓர் மகளிர் கல்லூரின் பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இலக்கிய நூல்களின் மொழிப்பெயர்ப்பிற்கு பாலமாக அமைந்து ஆற்றிய இலக்கியச் சேவையைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டு முத்துவின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை ஜப்பான் அரசு வெளியிட்டு கௌரவித்துள்ளது.

Advertisement

தமிழ் நூல்களை ஜப்பான் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல், ஜப்பானிய நூல்கள் சிலவற்றின் ஆங்கில பிரதிகளை பெற்று அவற்றை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். முத்து அவர்கள் எழுதிய ஜப்பானிய தேவதை கதைகள் புத்தகத்தை New Century  Book House வெளியிட்டது. மேலும், தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகள், மனித நாற்காலி, நாட்டியக்காரி என்ற புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

தன் வாழ்நாளில் ஒருமுறை கூட வெளிநாடுகளுக்கு செல்லாத முத்து அவர்களின் படம் ஜப்பான் நாட்டின் அஞ்சல் தலையில் வெளியாகி இருப்பது அவரின் இலக்கிய பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Friendship That has withstood time 

photo courtesy: thamilaali.com 

Back to top button