ஜப்பான் நாட்டில் தமிழில் அறிவிப்பு பலகை.!

பரவிய செய்தி
ஜப்பான் நாட்டில் உள்ள இரயில் நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகை! இந்திய தேசிய கொடியுடன் தமிழ் மொழி அறிவிப்பு பலகையில் இடம்பெற்றுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண பல நாடுகளில் இருந்து ரசிகர் கூட்டம் வர இருப்பதால், அதிக ரசிகர்களை கொண்ட நாடுகளின் மொழியில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டதாக இப்படங்கள் பதிவிடப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் தமிழில் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையெனினும், அது ஒலிம்பிக் போட்டிக்காக வைக்கப்படவில்லை. எனினும், இந்த படமானது ஜப்பான் நாட்டின் ஒரே ஒரு இரயில் நிலையத்தில் மட்டும் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையாகும்.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவின் ஷின்-ஒகுபோ இரயில் நிலையத்தில் அயல்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் பல நாடுகளின் மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பயணிகள் “ படிக்கட்டில் வலது பக்கமாக செல்லவும் ” என்பது போன்று பல அறிவிப்பு பலகைகள் 20 அயல்நாட்டு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
59 வயதான ஹிசாஷி அபு என்ற முன்னாள் ஸ்டேஷன் மாஸ்டர் ஷின்-ஒகுபோ பகுதியில் அயல்நாட்டவர்கள் அதிகம் வசிப்பதாலும், அயல்நாட்டவர்கள் அதிகம் வந்து செல்வதாலும் பல மொழிகளில் அறிவிப்பு பலகை அமைக்கும் யோசனையை வழங்கியுள்ளார்.
மேலும், ஜப்பான் மொழி அறியாத அயல்நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகள் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கவும், படிக்கட்டில் செல்லும் வழியை அறிவதிலும் சிரமத்துக்குள்ளாயினர் என்பதையும் அபு அறிந்துள்ளார். அவரின் முயற்சிக்கு ஷின்-ஒகுபோ இரயில் நிலையத்தில் 20 மொழிகள் இடம்பெற்று விட்டன.
சில வருடங்களாக ஷின்-ஒகுபோ இரயில் நிலையம் அமைந்துள்ள மாவட்டத்தில் அயல்நாட்டு மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஆகையால் தென் கொரியா, சீனா, ஆங்கிலம் மட்டுமின்றி வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஆசிய மொழிகள் உட்பட 20 மொழிகளில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. இந்திய தேசிய கொடிக்கு அருகில் “ படிக்கட்டில் வலது பக்கமாக செல்லவும் ” என்று எழுதப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் தமிழ் மொழியில் அறிவிப்பு பலகை எழுதப்பட்டது தமிழ் மக்களுக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தமிழில் இடம்பெற்ற அறிவிப்பு பலகையின் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.