ஜார்க்கண்டில் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி எனப் பரவும் வீடியோ 2019ல் பாஜக ஆட்சியில் நடந்தது !

பரவிய செய்தி
நாரி சக்தியா ? நாறிப்போன சக்தியா ? ஹர்கண்ட் ராஞ்சி. செவ்வாய்கிழமையன்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற அங்கன்வாடி சேவிகா சகாய சங்கப் பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். ராஜ்பவனில் இருந்து முதல்வர் இல்லம் நோக்கி பெண்கள் செல்லும்போது, இந்ந பூசை
மதிப்பீடு
விளக்கம்
ஜார்க்கண்ட் ராஞ்சியில் அங்கன்வாடி சேவிகா சகாய சங்கப் பெண்கள் செவ்வாய்க் கிழமையன்று சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது ராஜ்பவனில் இருந்து முதல்வர் இல்லத்தை முற்றுகையிடச் செல்லும்போது காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
நாரி சக்தியா ? நாறிப்போன சக்தியா ?
ஹர்கண்ட் ராஞ்சி. செவ்வாய்கிழமையன்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற அங்கன்வாடி சேவிகா சகாய சங்கப் பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். ராஜ்பவனில் இருந்து முதல்வர் இல்லம் நோக்கி பெண்கள் செல்லும்போது, இந்ந பூசை pic.twitter.com/zzu9kXbEkW
— SaveTheNation/தேசம் காப்போம் (@niayayakkural) September 24, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீப்ரேம்கள் மற்றும் முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடியதில் அது 2019ம் ஆண்டு நடந்த போராட்டம் என்பதை அறிய முடிந்தது.
2019ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகஸ்ட் மாதம் தொடக்கி பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு சலுகைகள் வழங்குவது, ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65-ஆக உயர்த்துவது, ஓய்வு பெறும் போது பணியாளர்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் அங்கன்வாடி சேவிகா சஹாயிகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டது.
அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் கைவிடப்படவில்லை என்றால், அனைவரையும் பணி நீக்கம் செய்து விடுவோம் என ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த ரகுபர் தாஸ் அறிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் போராடத் தொடங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் 40வது நாள் போராட்டத்தில், 2019 செப்டம்பர் 24ம் தேதி அம்மாநில முதலமைச்சரின் வீட்டினை முற்றுகையிடப் பேரணியாகச் சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினரால் தடுக்கப்பட்டதுடன் மிகக் கொடூரமான முறையில் தாக்கவும் செய்துள்ளனர். தற்போது பரவக் கூடிய வீடியோ அப்போது எடுக்கப்பட்டதுதான்.
இது தொடர்பாக ‘Scroll.in’, ‘Go News India’ போன்ற ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அப்போதே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. அதன் பிறகு நடைபெற்ற அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதலமைச்சராக உள்ளார்.
இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோ 2019ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் அங்கன்வாடி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது காவலர்கள் தடியடி நடத்தியது என்பதை உறுதி செய்ய முடிகிறது. இது தற்போது நடந்தது அல்ல.
முடிவு :
நம் தேடலில், ஜார்க்கண்ட் அங்கன்வாடி தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதாகப் பரவும் வீடியோவில் உள்ள நிகழ்வு தற்போது நடந்தது இல்லை. அது 2019ம் ஆண்டு பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது நடந்தது என்பதை அறிய முடிகிறது.