அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா உடன் நிற்பது பாகிஸ்தான் ராணுவ தளபதியின் மகனா ?

பரவிய செய்தி
பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா மகனுடன் இந்த நாட்டு உள்துறை அமைச்சர் மகன் ஜெய்ஷா ஃபோட்டோ ஷீட். இதே காங்கிரஸ் கட்சியில் யாராவது இப்படி ஃபோட்டோ எடுத்திருந்தால் இந்திய ஊடகங்களும் சங்கிகளும் எப்படி ஆடி இருப்பார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்ற போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய தேசியக் கொடியை வாங்க மறுத்த வீடியோ காட்சி வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி பஜ்வாவின் மகனுடன் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி மகனுடன் மிகுந்த மரியாதையாக கைகட்டி நிற்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா… இந்த கும்பலுக்கு உள்ளூர் ஏழை இஸ்லாமியர்கள் தான் எதிரிகள்….@adln1412mj @syedusaincumbum @TirucciJ1 @IlovemyNOAH2019 @sridhar_dmk_vlr @DrJayanThiyagu @sridhar_dmk_vlr pic.twitter.com/2FpxCU5qsk
— Seeniraj Lingasamy (@Seeniraj0158) September 2, 2022
உண்மை என்ன ?
ஜெய் ஷா உடன் இளைஞர் மற்றும் இளம் பெண் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஊர்வசி ராவ்டேலா என நடிகையின் பெயர் காண்பித்தது. ஊர்வசி ராவ்டேலா தமிழில் லெஜென்ட் திரைப்படத்தில் நடித்தவர்.
மேற்கொண்டு தேடுகையில், retropoplifestyle எனும் இணையதளத்தில், 2022 ஆசிய கிரிக்கெட் போட்டியைக் காண வந்த நடிகை ஊர்வசி ராவ்டேலா மற்றும் அவரது சகோதரர் யஷ் ராஜ் ராவ்டேலா ஆகியோர் ஜெய் ஷா உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கட்டுரை வெளியாகி இருக்கிறது. அந்த கட்டுரையின் உள்ளே அவர்கள் பேசிக் கொள்ளும் மற்றொரு புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
ஊர்வசி ராவ்டேலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது சகோதரர் யஷ் ராஜ் ராவ்டேலா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன. மேலும், யஷ்ராஜ் ராவ்டேலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியாவின் கிரிக்கெட் போட்டியை காணும் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
2018ம் ஆண்டு dikhawa.pk எனும் இணையதளத்தில், பாகிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதி கமர் பஜ்வா மகன் சாத் பஜ்வா திருமணம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. கீழே உள்ள புகைப்படத்தில் அவரின் தோற்றத்தை காணலாம்.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி பஜ்வா மகனுடன் உள்துறை அமைச்சரின் மகனும், பிசிசிஐ-யின் செயலாளருமான ஜெய் ஷா ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது.
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் ஜெய் ஷா உடன் இருப்பது சாத் பஜ்வா அல்ல, நடிகை ஊர்வசி ராவ்டேலாவின் சகோதரர் யஷ் ராஜ் ராவ்டேலா என அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி மகனுடன் ஜெய் ஷா இருப்பதாக தவறான புகைப்படம் பரப்பப்பட்டது. ஆனால், அதே போட்டியில் விவிஐபி பகுதியில் ஜெய்ஷா அமர்ந்து போட்டியின் காணும் போது அவருக்கு அருகாமையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் மகன் பஜ்வா அமர்ந்து போட்டியை கண்டு இருக்கிறார். ஜெய் ஷா மற்றும் பஜ்வாவிற்கு இடையில் அமர்ந்து இருக்கும் நபர் யாரென அடையாளம் காண முடியவில்லை.