“அறைகலன்” என்ற வார்த்தையைத் தான் உருவாக்கியதாக ஜெயமோகன் கூறியதன் பின்னணி !

பரவிய செய்தி

Furniture என்பதற்கு அறைகலன் என்கிற வார்த்தை வெண்முரசில் இருக்கிறது. அதிலிருந்து விக்ஸ்னரிக்கு போகிறது. அதன் பிறகு தினத்தந்தியில் அறைகலன்கள் விற்பனை என விளம்பரம் வருகிறது. அது நான் உருவாக்கிய வார்த்தை. – எழுத்தாளர் ஜெயமோகன்

மதிப்பீடு

விளக்கம்

எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பத்திரிகையாளர் சமஸ் இருவரும் பேசக்கூடிய 17 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Advertisement

Archive twitter link

அவ்வீடியோவில், ஜெயமோகன் தான் எழுதிய வெண்முரசு என்னும் நாவலில் furniture என்ற ஆங்கில வார்த்தைக்கு அறைகலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாகவும், அதன்பிறகே அகராதியில் சேர்க்கப்பட்டதாகவும், தினத்தந்தியில் அறைகலன் விற்பனை என்ற விளம்பரம் வந்ததாகவும் பேசியுள்ளார்.

இதையடுத்து, அறைகலன் என்ற வார்த்தை 1963ம் ஆண்டு வெளியான ஆட்சித்துறை தமிழ் என்னும் புத்தகத்தின் ஆறாவது பதிப்பிலேயே (1963) இடம்பெற்றுள்ளது என சூர்யா சேவியர், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

Advertisement

ஜெயமோகன் குறித்துப் பரப்பப்படும் 17 வினாடி வீடியோவின் முழு நேர்காணலினை இணையத்தில் தேடினோம். கடந்த 15ம் தேதி அருஞ்சொல் என்ற யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 

ஒரு மணிநேரம் 20 நிமிடம் கொண்ட அந்த முழு வீடியோவில், 13வது  நிமிடத்திற்குப் பிறகு அறைகலன் தொடர்பாகப் பேசியுள்ளார். அதில், புதிய தத்துவ சிந்தனைகள் சார்ந்த, ஏறத்தாழ 10,000 புதிய வார்த்தைகள், நான் உருவாக்கிய வார்த்தைகள் வெண்முரசில் இருக்கிறது. அதே போல மறைந்து போன பல வார்த்தைகள் புழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

உதாரணத்திற்கு, Furniture என்பதற்கு அறைகலன் என்கிற வார்த்தை வெண்முரசில் இருக்கிறது. அதிலிருந்து விக்ஸ்னரிக்கு போகிறது. அதன் பிறகு தினத்தந்தியில் அறைகலன்கள் விற்பனை என விளம்பரம் வருகிறது. அது நான் உருவாக்கிய வார்த்தை.

நீங்கள் இப்போது பயன்படுத்தும் வார்த்தைகளில் பல வார்த்தைகள் நான் உருவாக்கியது தான். இதற்கான வசதிகள் தமிழில் உள்ளது. ஏன் என்றால் தொல் மொழி அதற்கான இடத்தினை கொடுக்கிறது எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சமஸ்கிருத மற்றும் தமிழ் வார்த்தைகள் குறித்துப் பேசியுள்ளார்.

மறைந்து போன பல வார்த்தைகளைத் தான் எழுதிய நூலின் மூலம் புழக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகப் பேச ஆரம்பித்து, பிறகு தான் உருவாக்கிய வார்த்தை எனக் கூறியுள்ளார். ஆனால், புழக்கத்திற்குக் கொண்டுவந்ததாக அவர் கூறியதை  எடிட் செய்து, தான் உருவாக்கிய வார்த்தை என்பதை மட்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

அறைகலன் என்ற வார்த்தை தமிழில் உள்ளதா ?

மேலும், அறைகலன் என்ற வார்த்தை குறித்து இணையத்தில் தேடினோம். தமிழ்நாடு எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரால் 1957ம் ஆண்டு “ஆட்சிச் சொல்லகராதி” (Glossary of Administrative Terms) என்னும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அப்புத்தகத்தின் 4வது பதிப்பு 1983ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், 130வது பக்கத்தில் Furnished quarters – அறைகலனுடன் அமைந்த குடியிருப்பு, Furniture – அறைகலன் என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே போல், மணவை முஸ்தபா எழுதிய “அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்” என்ற புத்தகத்தின் முதல் பதிப்பு 1993ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியானது. அப்புத்தகத்திலும் சுமார் 18 இடங்களில் “அறைகலன்” என்ற வார்த்தை பயப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ என்ற நூல் 2014ம் ஆண்டு வெளிவந்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே அறைகலன் என்ற வார்த்தை தமிழிலிருந்துள்ளது. 

முடிவு : 

நம் தேடலில், ஜெயமோகன் அறைகலன் என்ற வார்த்தை தான் உருவாக்கியதாகக் கூறுவதற்கு முன்னர், மறைந்த வார்த்தைகளை வெண்முரசு என்ற தனது நூலின் மூலம் மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.

அதே சமயம், அறைகலன் என்ற வார்த்தையை உருவாக்கியதாக ஜெயமோகன் கூறுவது சரியல்ல. 2014ம் ஆண்டு வெண்முரசு நூலில் அறைகலன் என்ற வார்த்தை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே, பல தமிழில் நூல்களில் அவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button