This article is from Oct 12, 2019

ஜெகன் மோகன் ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தை ரூ.18,000 ஆக உயர்த்தினாரா ?

பரவிய செய்தி

ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளம் Rs 6,000 இருந்து 18,000. மாற்றப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

ந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் தன் பதவிப்பிரமாணத்தின் போதே பல திட்டங்களை அறிவித்து இருந்தார். அதை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தியும் வருகிறார்.

குறிப்பாக , கிராமப்புறங்களில் 5.6 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாக அறிவித்தது , ஆந்திராவில் கல்வி வியாபாரமில்லை உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகள் ஆந்திர மக்களை மட்டுமல்லாது தமிழக மக்களின் கவனத்தையும் அதிகம் ஈர்த்து வருகிறது என்றே கூற வேண்டும்.

Facebook post | Archived post 

சமீபத்தில் , அக்டோபர் 10-ம் தேதி jo என்ற முகநூல் பக்கத்தில் ” ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளம் Rs 6,000 இருந்து 18,000. மாற்றப்பட்டுள்ளது ” என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்யும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு உள்ளது. இந்த பதிவு சுமார் 5 ஆயிரம் லைக்குகள் , 36 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

ஜெகன் மோகன் பதிவை முகநூலில் உள்ள குழுக்களில் பகிர்ந்த பதிவுகளும் ஆயிரக்கணக்கில் லைக் பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் கேட்டுக் கொண்டனர்.

உண்மை என்ன ? 

பதிவில் , ஆந்திராவில் உள்ள ரயில்வே துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை ரூ 6 ஆயிரத்தில் இருந்து ரூ18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், ரயில்வே ஊழியர்களின் சம்பளம் குறித்த விவகாரங்கள் அனைத்திலும் மத்திய அரசால் மட்டுமே முடிவு எடுக்க முடியும். ஒரு மாநில அரசு , தன் மாநிலத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்தை உயர்த்துவது என்பது முடியாத காரியம்.

அடுத்ததாக, ஆந்திராவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்தோம். அதில், ஆந்திராவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் ” ஆஷா ஊழியர்களுக்கு ” ஊதியத்தை அதிகரித்து இருப்பதாக வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கிடைத்தது.

2019 ஜூன் 4-ம் தேதி வெளியான செய்தியில் , ” ஆஷா (accredited social health activist) ஊழியர்களுக்கான சம்பளம் மாதம் 10,000 ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் உயர்த்தி இருக்கிறார். இதற்கு முன்பாக, ஆஷா ஊழியர்களுக்கு மாதம் ரூ3,000 வழங்கப்பட்டு வந்தது ” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Video archived link  

மருத்துவ சுகாதார மையங்களில் பணிபுரியும் ஆஷா ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெகன் மோகன் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ யூட்யூப்-ல் ஜூன் 5-ம் தேதி வெளியாகி இருக்கிறது. 

தமிழகத்தில் வைரலாகும் புகைப்படங்களில் இருப்பதும் ஆஷா ஊழியர்களே. புகைப்படத்தில் செவிலியர்களும் இருப்பதை காணலாம்.

முடிவு : 

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் , ஆந்திராவில் ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளம் Rs 6,000 இருந்து 18,000 மாற்றப்பட்டுள்ளதாக வைரலாகும் செய்தி தவறானது.

ஆந்திராவில் சுகாதார மையங்களில் பணிபுரியும் ஆஷா ஊழியர்களுக்கு மாதம் சம்பளம் 3 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆஷா ஊழியர்கள் பாலபிஷேகம் செய்யும் புகைப்படங்களே தற்பொழுது தவறாக பகிரப்பட்டு வருகின்றன என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader